சென்னை: பரங்கிமலை அரசு நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில், மீதமுள்ள நிலங்களை மீட்டு, அதில் ஈடுபட்டுள்ள சார்பதிவாளர்கள் மீது கிரிமினல் வழக்கு மற்றும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறப்போர் இயக்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறுகையில், “சென்னை, பரங்கிமலை கிராமத்தில் உள்ள அரசு நிலங்கள் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவற்றை எந்த வகையில் ஆக்கிரமிப்புகள் செய்துள்ளனர், எந்தெந்த நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யபட்டுள்ளது மற்றும் எத்தனை ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் தமிழக அரசுக்கு அறப்போர் இயக்கம் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது.
இதில், 2015ஆம் ஆண்டில் பரங்கிமலை கிராமத்தில் தாசில்தார் குறிப்பிட்ட நிலத்தில் எந்த விதமான பதிவும் செய்யக் கூடாது என்று அறிவித்த நிலையில், தாய் பத்திரங்கள் இல்லாமல் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அங்குள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சர்வே எண் 442-இல் உள்ள 54 ஆயிரம் சதுர அடி நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுள்ளது. அதேபோன்று, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் எதிரே உள்ள நிலமும் ஆக்கிரமிப்பு நிலமாக உள்ளது. அங்கு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (STATE BANK OF INDIA) வங்கி இயங்கி வருகிறது. அந்த நிலத்தையும் மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. ஒரு வார காலத்திற்குள் வங்கியைக் காலி செய்ய வேண்டும் என்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பரங்கிமலை கிராமத்தில், அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து, கையகப்படுத்தபட்டுள்ள நிலங்களை அரசு மீட்டெடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு நில ஆக்கிரமிப்பு முறைகேட்டில் ஈடுபட்ட சார்பதிவாளர் ஒருவர் சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ளார். இதில் ஈடுபட்டுள்ள மீதமுள்ள சார்பதிவாளர்கள் மீது கிரிமினல் வழக்கு மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் தமிழக அரசுக்கு அறப்போர் இயக்கம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரபல ஆயில் நிறுவனத்தின் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றமா? கேன்சர் நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொது மக்கள் குற்றச்சாட்டு!