சென்னை: அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறியுள்ளதாவது, "உணவுத்துறை செயலராக கடந்த வாரம் நியமிக்கப்பட்ட கோபால் IAS-ஐ பணி இடை நீக்கம் செய்ய வேண்டி முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலருக்கு அறப்போர் இயக்கம் புகார் அனுப்பி உள்ளது.
கோபால் IAS, 2016 முதல் 2017 வரை ரேஷன் துறை, அதாவது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இயக்குனராக இருந்தார். அப்பொழுது அவர் நேரடியாக கிறிஸ்டி நிறுவனத்துடன் கூட்டு சதி செய்து, சந்தை மதிப்பை விட மிகப்பெரிய அளவில் அதிகமாக டெண்டர் வழங்கிய ஆதாரங்களை, ஏற்கனவே அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் கொடுத்துள்ளது.
சுமார் ரூ.2 ஆயிரத்து 28 கோடி ரேஷன் ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் 4.6.2021 அன்று லஞ்ச ஒழிப்புத் துறையில் வழங்கிய புகார் மீது விரிவான விசாரணை துவங்கப்பட்டு, இன்று வரை FIR பதிவு செய்யாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம், இந்த ஊழலில் கிறிஸ்டி குழு நிறுவனம், சுதா தேவி IAS போன்றோர் தவிர, அதிகாரத்தில் உள்ள கோபால் IAS ஒரு முக்கிய காரணம்.
அவர் 5 மாதங்களுக்கு முன்பு, கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டார். லஞ்ச ஒழிப்புத் துறையால் எப்படி அவர்களது ஆணையர் மீதே FIR பதிவு செய்ய முடியும்? தற்பொழுது அவர் உணவு துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார். FIR பதிவு செய்ய ஊழல் தடுப்புச் சட்டப்படி லஞ்ச ஒழிப்புத் துறை, அவரிடமே ஒப்புதல் வாங்க வேண்டும். அவர் ரேஷன் ஊழலில் ஈடுபட்டவர் என்று தெரிந்தும், ஏன் தமிழ்நாடு அரசு அவருக்கு விசாரணையை முடக்கக் கூடிய பதவிகளை வழங்கி வருகிறது?
லஞ்ச ஒழிப்புத் துறையால் தன்னிச்சையாக இந்த புகாரில் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கருதுகிறோம். எனவே, ஒரு முறையான விசாரணை நடைபெற, விசாரணை முடியும் வரை முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலர் அவரை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.