இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அதன் குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி முதலாவதாக கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
பின்னர் அங்கு பணிபுரியும் மருத்துவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
அப்போலோ மருத்துவமனைக்கு என 12,000 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தினமும் 100 நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும் என தெரிகிறது.
இந்நிகழ்வில் பிரதாப் சி ரெட்டி கூறுகையில், "இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி இன்று முதல் போடப்படுகிறது. கரோனா போன்ற தொற்றை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. கரோனா தடுப்பூசியை கண்டுபிடித்ததற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அப்போலோ மருத்துவர்கள் கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றினார்கள். கரோனா தடுப்பூசி விஞ்ஞானிகளால் பரிசோதனை செய்யப்பட்டுதான் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அனைவரும் தயங்காமல் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தவிர்க்கக் கூடாது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாடு முழுவதும் இன்றுமுதல் கரோனா தடுப்பூசி; பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்