சென்னை அண்ணா சாலை பகுதியில் போலி கால் சென்டர் நடத்தப்படுவதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் நடத்திய சோதனையில், பென்ஸ் கிளப்பில் நடத்தப்பட்ட போலி கால் சென்டர் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு விசாரணை நடத்தப்பட்டது.
இதில், பென்ஸ் உரிமையாளர் சரவணன், விசிக நிர்வாகி செல்வா என்கிற செல்வகுமார் உள்ளிட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களில், பென்ஸ் சரவணன் பத்திரிகையாளர் என்ற அடையாள அட்டை, பத்திரிகை சங்கத்தில் இருப்பதாக காரில் ஸ்டிக்கர் என மக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது. எனவே, தலைவனாக செயல்பட்ட செல்வகுமாரையும், பென்ஸ் சரவணனையும் காவலில் எடுக்கவிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதேபோல், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் செயல்பட்ட மற்றொரு போலி கால் சென்டர் கண்டுபிடிக்கப்பட்டது. இதை நடத்தி வந்தவர் மூனிர் உசேன், அவரது கூட்டாளிகள் முகமது ரியாஸ், மோகன், பூந்தமிழன் உட்பட 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையின் பல்வேறு இடங்களில், இதுபோல போலி கால் சென்டர் இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர். இது குறித்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் கூறினர்.
இதையும் படிங்க: மது இனி நாட்டுக்கு கேடில்லை...