தமிழ்நாடு அரசு சார்பில் திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடிகர்கள் ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகிபாபு, சரோஜா தேவி, சௌகார் ஜானகி உள்பட 42 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 2011ஆம் ஆண்டுமுதல் 2018ஆம் ஆண்டு வரையிலான பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற 201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2016ஆம் ஆண்டுமுதல் 2018ஆம் ஆண்டுவரை இயல், இசை, நாட்டியத் துறையில் சிறந்து விளங்கும் ஒன்பது கலைஞர்களுக்கு முறையே பாரதி, எம்.எஸ். சுப்புலட்சுமி, பாலசரசுவதி ஆகியோரது பெயர்களில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதில், தலா மூன்று அகில இந்திய அளவிலான விருதுகள், மூன்று சிறந்த கலை நிறுவனங்களுக்கு கேடயம், ஒரு சிறந்த நாடகக் குழுவிற்கான சுழற்கேடயம் ஆகியவற்றிற்கான பெயர் பட்டியல்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கலைமாமணி விருதுபெற்று வறிய நிலையில் வாழும் வயோதிக எட்டு மூத்தக் கலைஞர்களுக்கு, பொற்கிழி வழங்கப்படும். அவர்களுக்கு வழங்கப்படும் பொற்கிழி தொகை 25 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டுமுதல் கலைமாமணி விருது பெறும் நபருக்கு, பொற்பதக்கம் மூன்று சவரனிலிருந்து ஐந்து சவரனாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், இசை, நாட்டியம், திரைப்படம் ஆகிய மூன்று கலைப்பிரிவுகளில் ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளது. அதில், ஒரு கலைப்பிரிவுக்கு, ஒரு பெண் கலைஞர் என்ற அடிப்படையில் தேர்வுசெய்து அவருக்கு, 5 சவரன் (22 கேரட்) தங்கத்தால் செய்யப்பட்ட விருதுகள் 2019ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'இப்போது நடப்பது அரசே அல்ல; ஊழல்வாதிகளின் கோட்டை' - திமுக தலைவர் ஸ்டாலின்