சென்னை: பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில தலைவர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவில் இணைந்தார்.
திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் என்பதால், இவருக்கு பாஜகவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பாஜகவில் இணைந்த சில நாட்களில் ஓபிசி பிரிவின் மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இதேபோன்று, பாஜகவில் சிறுபான்மை பிரிவின் மாநில தலைவராக இருக்கூடியவர் டெய்சி சரண். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சிறுபான்மை பிரிவு தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இதில் சூர்யாவிற்கு அழைப்பு வழங்கப்பட்ட வில்லை என கூறி, டெய்சி சரணை சூர்யா தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஆபாசமாகவும், மிரட்டல் விடுத்தும் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை பாஜக தலைமைக்கு டெய்சி சரண் கொண்டு சென்றுள்ளார்.
அதன்படி, டெய்சி சரணுக்கு உரிய நியாயம் கிடைக்கும் என கூறி, இந்த ஆடியோ விவகாரத்தை ஒழுங்கு நடவடிக்கை குழுவை விசாரிக்கவும் அண்ணாமலை உத்தரவு பிறப்பித்தார். இந்த ஆடியோ விவகாரம் குறித்து சமூக வலைதளத்தில் டெய்சி சரணுக்கு ஆதரவாக பதிவிட்ட பாஜகவின் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் 6 மாதத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் இடைநீக்கத்தை காயத்ரி ரகுராம் தொடர்ந்து மறுத்து கொண்டு வருகிறார்.
இது தொடர்பாக பேசிய அண்ணாமலை, "பாஜகவில் கொள்கைக்கு எதிரான செயல்பாடு மற்றும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறியிருந்தார். நேற்று டெய்சி சரணும், சூர்யா சிவாவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதில், "சூர்யா எனக்கு தம்பி போன்றவர், ஏதோ சூழ்நிலையில் கசப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் பேசி சுமூக முடிவுக்கு வந்துள்ளோம்" என கூறியிருந்தார். அதே போன்று, "டெய்சி சரண் எனக்கு அக்கா போன்றவர். நான் செய்தது தவறு தான். அதற்காக என் மீது தலைமை எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவேன்" என கூறியிருந்தார்.
இந்த நிலையில், பாஜகவில் இருந்து சூர்யா சிவா, இடைநீக்கம் செய்யப்படுகிறார் என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில், "தமிழக பாஜகவில் இருந்து சூர்யா சிவா கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாதத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார். சூர்யா சிவா தவறை ஒப்புக்கொண்டாலும் அவர் செய்தது சரியாகி விடாது. அவர் செயல்பாடுகளில் அடுத்தடுத்து மாற்றம் வரும் போதும், அவர் மீது எனக்கு மீண்டும் நம்பிக்கை வரும் போதும் அவருக்கு பொறுப்புகள் வழங்கப்படும். அது வரை ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு சூர்யா சிவா பணியாற்றலாம்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு கூட்டம் எப்போது? ஓபிஎஸ் பதில்