சென்னை: தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்தியாவில் இருக்கக்கூடிய அரசியல் தலைவர்கள், பணக்காரர்கள், சமூக செயற்பாட்டாளர் என யாரையும் பெகாசஸ் செயலி மூலம் உளவுப் பார்க்கவில்லை எனச் சம்பந்தப்பட்ட நிறுவனமே கூறிய நிலையில், வேண்டுமென்றே திட்டமிட்டு நாடாளுமன்றம் கூடுவதற்கு முதல்நாள் இந்தக் குற்றச்சாட்டு பரப்பப்பட்டு எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருப்பவர்கள் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். அவர்களை பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துவைக்கக்கூட நேரம் கொடுக்காமல் அவையை எதிர்க்கட்சிகள், முடக்கியுள்ளன.
மேலும், முகாந்திரம் இல்லாத விஷயத்திற்காக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவது எதிர்க்கட்சியாகச் செயல்படாமல் எதிரிக் கட்சியாக காங்கிரஸ் செயல்படுவதைக் காட்டுகிறது.
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலை. அதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு செய்துவருகிறது. அது குறித்து நாடாளுமன்றத்தில் பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவிப்பார்.
தமிழ்நாட்டில் பாஜகவைப் பிரதானப்படுத்தி திமுக எதிர் அரசியல் செய்கிறது. அதனால் திமுகவிற்கு எதிரி பாஜக, பாஜகவிற்கு எதிரி கட்சி திமுகதான்.
அதனடிப்படையில்தான் திமுகவிற்கு மாற்று பாஜக எனக் கூறினேன். அதிமுக பிரதான சட்டப்பேரவை எதிர்க்கட்சியாகத் தமிழ்நாடு நலன் சார்ந்த கேள்விகளை எழுப்பிவருகிறது.
அதிமுக, பாஜக கூட்டணியும் தொடர்ச்சியாக நல்ல முறையில் இருந்துவருவதால் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்தான யூகங்கள் குறித்து பதில் கூற முடியாது" என்றார்.
இதையும் படிங்க: பெகாசஸ் சர்ச்சை: திருணமூல் காங்கிரஸ் எம்பி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்