டான்செட் தேர்வு நடத்துவது குறித்து அந்தக் குழுவின் தலைவர் சூரப்பா தலைமையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்வினை நடத்துவதற்குரிய கால அட்டவணை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூரப்பா, “தமிழ்நாடு அரசு டான்செட் நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் என அரசாணை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்தக் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் டான்செட் தேர்வினை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
டான்செட் தேர்வு விண்ணப்பிப்பதற்கான தேதியை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்தது போல் நுழைவுத் தேர்விற்கான தேதியில் எந்தவித மாற்றமும் இருக்காது. டான்செட் தேர்வு குறித்த கால அட்டவணை இன்று அல்லது நாளை வெளியிடப்படும்.
இந்த நுழைவுத் தேர்வு மூலம் முதுகலைப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் டான்செட் தேர்வு மூலம் முதுகலைப் படிப்பில் மேலும் சில கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு கூட்டத்தில் மாணவர்களின் நீண்டகால நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். முதுகலை பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலை என்பது அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் இல்லாமல் சர்வதேச அளவில் உள்ளது” என்றார்.