சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக உருவாகி உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழையானது பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ததன் காரணமாக, அங்குள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி, குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது.
இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவத்தேர்வுகள், மழையால் பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ், “சென்னையில் கனமழை பெய்து வெள்ளமாக இருந்தபோது அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் அனைத்தும், தமிழ்நாடு முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது, தென்மாவட்டங்களான 5 மாவட்டங்களில் மட்டும் கனமழை அதிகமாக இருப்பதால், அனைத்து மாவட்டத்திற்கும் தேர்வினை ஒத்தி வைத்தால், வரும் பருவத்தேர்வில் பாதிப்பு ஏற்படும். எனவே, அதனை கருத்தில் கொண்டு, 5 தென்மாவட்டங்களுக்கு மட்டும் தேர்வினை ஒத்தி வைத்துள்ளோம்.
மேலும் தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் பெய்த கனமழையால் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி அனைத்து வகுப்புகளுக்கும் சனிக்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாவட்டங்களில் இறுதி ஆண்டில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, அவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்வுகள் நடத்தப்படும். அவர்களுக்கான வகுப்புகள் அடுத்த வாரம் துவங்கும்.
இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில், அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப தேர்வினை ஒத்தி வைப்பார்கள். தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் படித்த மாணவர்கள், மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்பின்படி, அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்குக் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!