சென்னை: அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை கமிஷனுக்கு கால நீடிப்பு வழங்கக்கூடாது என ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஆசிரியர்கள் சங்கம், "அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா மீது எவ்வித அடிப்படை ஆதாரமின்றி எழுதப்பட்ட கடிதங்களில் கண்ட குற்றச்சாட்டுகளை முன் வைத்து ஒரு நபர் விசாரணை கமிஷனுக்கு கடந்த மூன்று மாதங்களுக்க முன்பு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் கமிஷன் தொடர் விசாரணைகளை நடத்தியும், சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் எவ்வித முகாந்தரமும் இருப்பதாகத் தெரியவில்லை. கரோனா முழு அடைப்புக்கு பிந்திய கல்விப் பணியில் கவனம் செலுத்த வேண்டிய ஆசிரியர்களின் முழுக்கவனமும் இந்த விசாரணையின் மூலம் திசை திருப்பப்பட்டு தொய்வு நிலையிலேயே உள்ளது. விசாரணைக்கு தொடர்பில்லாத விவகாரங்களை கேட்டு, காலத்தை விரயம் செய்வதன் மூலம் கல்வியின் மீதான கவனமும் சிதறடிக்கப்படுகிறது.
இந்நிலையில், விசாரணை கமிஷனுக்கு நிர்ணயிக்கப்பட்ட மூன்று மாத காலக்கெடுவுக்குள், துணைவேந்தரின் நேர்மையை சந்தேகிக்கும் ஆதாரங்கள் எதுவும் இல்லாத பட்சத்தில் விசாரணை கமிஷனின் காலக்கெடுவை மீண்டும் நீடிப்பது என்பது கல்வியாளர்கள் அரசின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை நீர்த்துப் போகச் செய்வதோடு அண்ணா பல்கலைக்கழகத்தின் மாண்பை நாமே சிதைப்பது போலாகும். விசாரணை என்ற பெயரில் பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடிப்பது விரும்பத்தக்கதல்ல.
உலக அரங்கில் அண்ணா பல்கலைக்கழகத்தின் புகழை உச்சிக்கு கொண்டு செல்ல அரசின் ஆதரவு மிக முக்கியமானது. இதை மனதில் கொண்டு கலையரசன் கமிஷனுக்கான கால நீட்டிப்பு எதையும் வழங்காமல் அணணா பல்கலைக் கழக துணைவேந்தர் மீதான விசாரணையை திரும்பப் பெறவேண்டும்" எனத் தமிழ்நாடு அரசினை வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: துணைவேந்தர் சூரப்பா நல்லவரா, கெட்டவரா? - விசாரணையில் தெரியும்