சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை டிஜிட்டல் மயமாக்குவதிலும், வெற்று சான்றிதழ்களை அச்சிடுவதிலும் ரூ.77 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கடந்த ஆண்டு மத்திய தணிக்கைத் துறை (சிஏஜி) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து முறைகேடு புகார் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த விவகாரம் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுரப்பா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இது தவிர 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டு அடிப்படையில் அப்போது இருந்த அதிகாரிகள் சிலர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊழலில் பலர் தப்பித்துள்ளனர் என்று சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைகேடு தொடர்பாகச் சுரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழு, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது. நீதிபதி கலையரசன் இது தொடர்பாக விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விசாரணை குழு கூட்டம் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த விசாரணைக் குழு கூட்டம் சட்டப்பேரவை கணக்கு தணிக்கை குழு தலைவரும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவருமான செல்வப்பெருந்தகை, திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
2016-17 காலகட்டத்தில் அண்ணா பல்கலையில் பணியாற்றிய துணைவேந்தர், துணைவேந்தர் பொறுப்புக் குழு அதிகாரிகள், சுமார் 6 ஐஏஎஸ் அதிகாரிகள், முன்னாள் பேராசிரியர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் நேரில் வந்து விளக்கம் அளித்தனர்.
மேலும் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா உள்ளிட்ட பேராசிரியர்களுக்கு விசாரணை குழு முன் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 3,4 முறை விசாரணை கூட்டம் கூடவுள்ளதாகவும், எவ்வாறு விதிமீறல் நடைபெற்றது, யார் உடந்தையாக இருந்தார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெற்ற பின்பு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படுமெனத் தணிக்கை துணைக் குழு தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கழிவுநீரில் இருந்து மாசுபாடுகளை அகற்றுவதற்கான ஏரோஜெல் உறிஞ்சிகள்- சென்னை ஐஐடி அசத்தல்