சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் சேர்வதற்கு 446 கல்லூரியில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 996 இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழுவின் மூலம் சிறப்பு, பொதுக்கலந்தாய்வு,துணைக்கலந்தாய்விற்கு 1 லட்சத்து 54 ஆயிரத்து 278 இடங்கள் அனுமதிக்கபட்டன.
விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் ஆக.11ஆம் தேதி 1,58,157 பேருக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. சிறப்புப் பிரிவினர், பொதுப்பிரிவினர்,துணைக் கலந்தாய்வு என வரிசையாக நடத்தப்பட்டன. துணைக்கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் 1 லட்சத்து 650 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. 53 ஆயிரத்து 628 இடங்கள் காலியாக இருக்கின்றன.
பொறியியல் கலந்தாய்வில் 4 வது சுற்று முடிவில் 14 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேராமல் இருந்தனர். துணைக் கலந்தாய்வில் 5 கல்லூரிகள் ஒரு மாணவரை மட்டும் சேர்த்துள்ளனர். துணை கலந்தாய்வு முடிந்த பின்னரும் 9 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவரும் சேராத அவலநிலை உள்ளது. 16 பொறியியல் கல்லூரிகளில் 1 சதவீதம் மாணவர்களும், 28 கல்லூரியில் 5 சதவீதம் மாணவர்களும் சேர்ந்துள்ளனர். 48 கல்லூரியில் 10 சதவீதம் மாணவர்களும், 88 கல்லூரியில் 25 சதவீதம் மாணவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 13 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீதம் இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டள்ளனர். 56 கல்லூரிகளில் 95 சதவீதமும், 75 கல்லூரியில் 90 சதவீதமும், 164 கல்லூரியில் 75 சதவீதமும் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.