திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்க முடியாமல் போனது மிகவும் வருத்தமளிப்பதாக அண்ணா பல்கலைக் கழக விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் செந்தில் குமார் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது, "நாங்கள் எங்களின் குழுவினருடன் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்துடன் தொடர்புகொண்டோம். அதன்பின்னர் சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரிடம் விவரத்தினை தெரிவித்தோம். பின்னர் சனிக்கிழமை நடுக்காட்டுப்பட்டியைச் சென்றடைந்தோம்.
நாங்கள் கண்டுபிடித்த ரோபோவை பயன்படுத்தி மீட்கும் பணியில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டோம். ஆனால் அபாக்கியமாக அது நடைபெற முடியாமல் போனது. போர்வெல் விட்டம் 4.5 இன்ச், ஆனால் நாங்கள் தயாரித்திருந்த ரோபா 5.5 இன்ஜ் விட்டம் கொண்டது. அதனால் அதனை உள்ளே இறக்க முடியவில்லை.
சனிக்கிழமை இரவு 9 மணியளவில் தொழில்நுட்பக் குழு குழந்தையின் விரல்களைத் தொடுவதற்கு ஒரு வெப்ப கேமராவை ஆழ்துளைக் கிணற்றில் இறக்கியது. அந்தக் கேமரா மூலம் 37 டிகிரி செல்சியஸ் குழந்தையின் உடலின் வெப்பம் பதிவு செய்தது.
அதனைத் தொடர்ந்து உடனடியாக ஆட்சியர், பிற அலுவலர்களுக்கு சுஜித் உயிருடன் இருக்க முடியும், ஆனால் மயக்கமடைந்திருக்கலாம் என்று தெரிவித்தோம். ஏனென்றால் மற்றொரு அதிநவீன கேமரா பயன்படுத்தப்பட்டபோது உடல் இயக்கம் இல்லை. எனவே குழந்தை உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதி செய்த பின்னர் பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இறுதியில் குழந்தையை உயிருடன் மீட்க முடியாமல் போனது வருத்தமாக உள்ளது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: மனதை தேற்றிக்கொள்கிறேன்... நீ கடவுளின் பிள்ளை! - விஜயபாஸ்கர் உருக்கம்!