சென்னை: சென்னை எண்ணூரை அடுத்த பெரியக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் கோரமண்டல் இண்டர்நேஷனல் என்ற உர நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால், அப்பகுதியில் உள்ள சின்ன குப்பம், பெரிய குப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் ஆகிய கிராமங்களில் கடுமையான நெடி பரவியது.
அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு மயக்கம், மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலக்குறைவுகள் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், எண்ணூர் வாயுக்கசிவு குறித்து அண்ணா பல்கலைக்கழக வேதிப்பொறியியல் துறைத்தலைவர் கே.வி.ராதா ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பேட்டியில், "அமோனியா கசிவு காற்றில் கலந்துள்ளதால், அதனை சுவாசித்தவர்களுக்கு மூச்சுக்குழாயில் லேசான எரிச்சல் இருக்கும். லேசான தோல் எரிச்சல், சுவாசிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டிருக்கும், ஆனால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாது. மேலும், தற்போது காற்றில் 3 ஆயிரம் பிபிஎம்தான் கலந்துள்ளது. வெளியில் கசிந்துள்ளதால் காற்றில் கலந்துவிடும்.
மேலும், 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பிபிஎம் இருந்தால் மட்டுமே உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த வாயுவினால், வயதானவர்களுக்கான பாதிப்பு சில நாட்கள் வரை நீட்டிக்கலாம். விவசாயத்திற்கு பயன்படுத்தும் அமோனியாவை நிலத்திற்கு போடும்போது, கைகளில் லேசான அரிச்சல் இருக்கும். அது போன்றதுதான் தற்போது காற்றில் பரவி இருக்கும் இந்த அமோனியாவும்.
பொதுவாக வாயுக்கள் HDPE பைப் லைனில் எடுத்துச் செல்லப்படுகிறது. அம்மோனியா கசிவதற்கு வாய்ப்பே இல்லை. ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டு, அதனை கவனிக்காமல் விபத்து ஏற்பட்டிருக்கலாம். இதுவரை ஆய்வு செய்வது தொடர்பாக எந்தவித அறிவுறுத்தல்களும் வரவில்லை. அரசுத் தரப்பில் அறிவுறுத்தல்கள் பெறப்படும் பட்சத்தில், நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொள்வோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எண்ணூரில் அமோனியம் வாயு கசிவு: கோரமண்டல் தொழிற்சாலையை மூட தமிழக அரசு உத்தரவு!