கரோனா ஊரடங்கு காலத்தில், வீதிகளில் போதிய உணவு கிடைக்காமல் அல்லல் படும் கால்நடைகளுக்கு உணவு வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
விலங்குகளுக்கு ஊரடங்கு காலத்தில் உணவு தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது. மேலும், சென்னை உயர்நீதி மன்றத்தால் ஒரு குழு அமைக்கப்பட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை மூலம் ஆதரவற்ற நாய்கள், பூனைகள், குதிரைகளுக்கு தேவைப்படும் தீவனப் பொருள்களை கொள்முதல் செய்து விலங்குகள் நல அமைப்பின் மூலம் விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டது.
முதற்கட்டமாக சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரிசி -1,250 கிலோ , நாய் உலர் தீவனம் -220 கிலோ , 525 கிலோ குதிரைகளுக்கான தீவனம், ஆவின் நிறுவனத்தின் மூலம் 625 கிலோ பால் பவுடர் ஆகியவை இன்று (மே 29) கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர், விலங்குகள் நல அமைப்புகளுக்கு வழங்கப்பட்டது.
இதன் மூலம் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் பயன்பெறும். கரோனா ஊரடங்கு காலத்தில் இத்தகைய பணிகள் தங்கு தடையின்றி நடைபெற கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் துறை மூலம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
உணவு கிடைக்காமல் அல்லல் படும் கால்நடைகளின் துன்பத்தை தணிக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்து மாவட்ட நிர்வாகங்கள், கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநர்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், இதர விலங்கு நல அமைப்புகள், தனி நபர்கள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.