சென்னை : காவல் துறையினருக்கு வாரம் ஒருமுறை விடுப்பு அளித்து காவல் துறை தலைமை இயக்குநர் அண்மையில் சைலேந்திர பாபு அறிவிப்பு வெளியிட்டார்.
காவல் துறையினர் தங்கள் உடல் நலனை பாதுகாத்துக்கொள்ளவும், குடும்பத்தினருடன் போதுமான நேரம் செலவழிக்கும் வகையில் இந்த விடுப்பு அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்போடு வார விடுப்பு எடுக்காமல் விருப்பத்தோடு பணிக்கு வரும் காவலர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கவும் சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்தார்.
காவல் துறையினரின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறிய நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த அறிவிப்புக்கு தங்களது வரவேற்பை தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். அதில், ”தமிழ்நாடு காவல் துறைக்கு வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று காவல் துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. காவலர்களுக்கு வார விடுமுறை என்பது பாமக நீண்ட காலமாக வலியுறுத்திய கோரிக்கையாகும்.
காவலர்களுக்கு 8 மணி நேர பணி வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதும் பாமகவின் நீண்ட நாள் கோரிக்கையாகும். அதையும் நிறைவேற்றி காவலர்களின் நலனை பாதுகாக்க தமிழ்நாடு முதலமைச்சரும், காவல்துறை தலைமை இயக்குனரும் முன்வர வேண்டும்”எனத் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: காவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை - டிஜிபி உத்தரவு