தமிழ்நாட்டில் ஒருபுறம் தேர்தல் பரபரப்பு நிலவி வருகிறதென்றால் மற்றொருபுறம் சசிகலாவின் வருகை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திமுக, அதிமுக என அனைத்து கட்சிகளும் அவரது வருகையால் தமிழக அரசியலில் எவ்வித மாற்றமும் உண்டாகாது எனக் கூறினாலும் ஒருவித தயக்கத்துடனே செயல்பட்டு வருகின்றனர்.
சசிகலாவின் வருகை குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் ஒவ்வொரு செயலையும் அரசியல் தலைவர்களும், மக்களும் கவனித்து வருகின்றனர். இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தரம் தாழ்ந்த தனிப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்வது எப்படி? எனக் குறிப்பிட்டு அண்ணாவின் வரிகளை பதிவிட்டுள்ளார்.
அவரது அந்தப் பதிவில் "மாற்றார் மனம் போன போக்கில் ஏசுவது கேட்டா உனக்கு இந்த வாட்டம்? வீரக்குலத்தில் உதித்தவனே! மார்பில் பாய்ந்த வேலினைப் பறித்தெடுத்து மதகரி (மதம் பிடித்த யானை) மீது வீசினானாமே உன் முன்னோர்களில் ஒரு வீரன் களத்தில்; மறந்துவிட்டாயோ?
வீசினான் என்றவுடன் வசைமொழியின் விருப்பம் தீரும் வரை, விசாரம்(கவலை) குறையும் அளவு நானும் வீசவா என்று கேட்கத் தோன்றும் தம்பி! ஆனால், வீரன் வேல் வீசியது மதகரி மீது. சிறுநரி மீதல்ல, தெரிகிறதா?" என்ற பேறிஞர் அண்ணாவின் வரிகள் இடம்பெற்றுள்ளது.
அவரது இந்தப் பதிவு தற்போது அரசியல் வட்டாரங்களிடையே பேசுபொருளாகியுள்ளது.