திருவள்ளூர் மத்திய மாவட்ட அமமுக சார்பில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அமமுகவில் இணையும் விழா பூந்தமல்லி வேலப்பன் சாவடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டர். இந்நிகழ்ச்சியில் அதிமுக, பாமக, தேமுதிக, ரஜினி மக்கள் மன்றம் ஆகிய கட்சிகளை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தனர். அப்போது தொண்டர்களால் அவருக்கு வீரவாள், ஜெயலலிதா உருவசிலை பரிசளிக்கப்பட்டது.
பின்னர் பேசிய டி.டி.வி தினகரன், "ஜெயலலிதா நம்மோடு இல்லை என்றாலும், அவருடைய திருவுருவத்தையும், திருப்பெயரையும், கொள்கைகளையும் தாங்கியிருக்கிற இயக்கமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களால் உருவாக்கப்பட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பார்கள் ஜெயலலிதாவையும், அவருடைய கொள்கையும் மறந்துவிட்டார்கள்.
அவர்கள் வகுத்து தந்த பாதையை விட்டு கட்சியையும், ஆட்சியையும் வேறு திசையில் அழைத்துச் செல்கிறார்கள் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகதெரியும். அவர்கள் மத்தியிலே ஆள்பவர்களின் துணையோடு ஆட்சியும், கட்சியையும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் விரும்பாத, மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு கட்சியாக அதிமுக இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தோல்வியடைந்த பிறகு இயக்கம் அழிந்துவிடும் என்று சில நிர்வாகிகள் விலகி செல்கிறார்கள். இவர்கள் சுயநலத்திற்காக கட்சியை விட்டு விலகிச்செல்கின்றனர். ஆனால் உண்மையான தொண்டர்கள் கட்சியில் தான் இருக்கிறார்கள். வேலூர் தேர்தலை கண்டு அமமுக பயந்து விட்டது என்று பேசுகிறார்கள். கட்சியை பதிவு செய்யும் வேலையில் உள்ளோம் கட்சியை பதிவு செய்து, சின்னத்தை பெற்றபின் அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் நாம் போட்டியிடுவோம்.
இந்த தேர்தல் தோல்வி எப்படி ஏற்பட்டது என்பது உங்களுக்கு தெரியும்.ச வருங்காலத்தில் நாம் எல்லா தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்பது உறுதி. எதிரிகளை போல் துரோகிகளையும் ஒரு கை பார்க்க வேண்டும்"என்று தெரிவித்தார்.