சென்னை: திருவாரூர் மாவட்டம், கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன்(48). இவர் சென்னை நொளம்பூர் ரெட்டிபாளையம் பகுதியில் ஜே.கே என்ற மீன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று (செ.5) இரவு மீன் கடையில் இருந்த போது, மீன் கடைக்குள் நுழைந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென கடையில் இருந்த மீன் வெட்டும் கத்தி மற்றும் பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு ஜெகனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
ஜெகன் தப்பி ஓட முயற்சித்த போது, மர்ம கும்பல் விடாமல் துரத்திச் சென்று ஜெகனை சாலையில் வைத்து சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். மேலும், ஜெகன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நொளம்பூர் போலீசார் ஜெகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். நொளம்பூர் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, கோவிலூரைச் சேர்ந்த ராஜேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஜெகன் மற்றும் அவரது சகோதரர் மதனுக்கு தொடர்பு இருந்ததாக ஜெகன் சிறைக்கு சென்றதாகவும் பின் ஜாமீனில் வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது. ராஜேஷ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் ஜெகனை மர்ம கும்பல் வைத்து வெட்டி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் முன்பகை காரணமாக கொலை நடந்ததா? அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை நடந்ததா? எனப் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட நபர் அமமுக நிர்வாகி என்பதும் அவர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு இருப்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் மீன் கடை உரிமையாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:நெல்லை பாஜக பிரமுகர் கொலை வழக்கில் தீடீர் திருப்பம்.. ஆய்வாளருக்கு ஆதரவாக போஸ்டர்கள்..