அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 'குக்கர்' சின்னம் வழங்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து வேறு ஏதேனும் பொதுச்சின்னத்தை அமமுகவிற்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் நிலையில், அமமுகவின் சார்பில் மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ‘பரிசுப் பெட்டி’ பொதுச் சின்னமாக தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து, நீண்ட இழுபறிக்கு பின்னர் கிடைத்த இந்த சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டுசென்று வெற்றிபெறுவோம் என அமமுகவினர் கூறினர்.
இந்நிலையில் 'குக்கர்' சின்னத்தை பொதுப்பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அதை சுயேச்சைகளுக்கு கொடுக்கக் கூடாது என்றும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தலைமைத் தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் முஸ்தபா கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
"பொதுப்பட்டியலில் இருந்து குக்கர் சின்னத்தை நீக்க வேண்டும். அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் அச்சின்னத்தின் மூலம் வெற்றி பெற்றிருக்கிறார். எனவே, சுயேச்சை வேட்பாளர்களுக்கு அந்த சின்னதை ஒதுக்கினால் குழப்பம் ஏற்படும்.
தேர்தலில் யாருக்கும் அச்சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தமிழகத் தேர்தல் அலுவலரிடம் முறையிட்டுள்ளோம். அவர் பரிசீலிப்பதாக கூறியுள்ளார். இதே கோரிக்கை மனுவை இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பியுள்ளோம். இது குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.