தமிழ்நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தாலும், குணமடைபவர்களின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பெரும்பாலும் நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் ஏற்படும் சுவாச பிரச்னைகளைத் தீர்க்க செயற்கை முறையில் சுவாசம் அளிக்கப்படுகிறது. அதற்காக ஆக்சிஜன் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மற்றொரு சிகிச்சையாக கவுந்து படுக்க வைப்பது கடைபிடிக்கப்படுகிறது. இதனால் நோயாளிக்கு மூச்சிழுக்கும் திறன் படிப்படியாக குறைகிறது. இத்தகைய நோயாளிகளை தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்புகின்றனர். அங்கே தேவைப்பட்டால் வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக் கருவியை பொருத்துகின்றனர்.
மேலும், நோயாளியை கவுந்து படுக்க வைக்கும்போது, அவரது நுரையீரலில் சில பகுதிகள் கூடுதலாக விரிவடைகின்றன. இதனால் கூடுதல் ஆக்சிஜன் அவருக்கு கிடைக்கும். வைரஸுடன் போராட அவரது உடலுக்கு கூடுதல் தெம்பு கிடைக்கும் என அரசு மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் தற்போதுவரை ஆக்சிஜன் சிலிண்டர்கள் அதிகமான இருப்பில் வைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையை மாற்ற ஆக்சிஜன் குழாய்களை பொதுப்பணித் துறையின் மூலம் அமைப்பதற்கு முதல்கட்டமாக ரூ. 75.28 கோடி நிதி ஒதுக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 13,900 படுக்கைகளுக்கு தேவையான திரவ ஆக்சிஜன் குழாய்கள் வழியாக வழங்க ஏற்பாடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து சென்னையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆக்சிஜன் சேமிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தொட்டிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர்களை அதிகப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து டாக்டர்.சிவபாலன் கூறுகையில், "பொதுவாக ஒருவருக்கு உடலில் உள்ள ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்துவிட்டால் அது அவருக்கு அறிகுறிகளாகத் தென்படும். ஆனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நபருக்கு அவ்வாறு வெளிப்படாது. இது "ஹேப்பி ஹைபாக்சியா" எனச் சொல்லக்கூடிய நிலை. அவருக்கு 100 விழுக்காடு இருக்க வேண்டிய ஆக்சிஜன் அளவு 80% வந்தால் கூட வழக்கமாக நடமாடுவார். அதே சமயம் திடீரென மயக்கமாகி சரிந்துவிடும் ஆபத்தும் உள்ளது. இதனால்தான் திடீர் இறப்புகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்கவே தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் குறையாமல் இருக்க ஆக்சிஜன் தேவைகளை அரசு அதிகப்படுத்துகிறது" என்கிறார்.
உடலுக்குள் முக்கியத் தேவையாக இருக்கும் ஆக்சிஜனை கரோனா வைரஸ் முற்றிலும் குறைத்துவிடும் தன்மையை கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசு அறிவித்தப்படி அனைத்து வசதிகளையும் விரைந்து அமைத்துக் கொடுத்தால், மூச்சுத் திணறலால் ஏற்படும் மரணங்களைக் குறைக்கமுடியும்.
இதையும் படிங்க: மதுரை தோப்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் அமைக்கப்பட்டுள்ளது!