சென்னை எழும்பூர் ஆணையர் அலுவலக சாலையில் உள்ள காவலர் மருத்துவமனைக்கு டாடா (TATA) மற்றும் டிசிஎஸ் (TCS) அறக்கட்டளையின் சார்பில் காவல்துறையினர் பயன்பாட்டிற்காக காவலர் மருத்துவமனைக்கு ஒரு கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "ஒரு நாளுக்கு 400லிருந்து 500 பேர் காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சென்னை காவல்துறையில் 2ஆயிரத்து 390 காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2ஆயிரத்து 100 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர்.
சென்னை காவல்துறையில் இரவு பணியில் இருக்கும் காவல் ஆய்வாளர்களின் தொலைபேசி எண்கள் சென்னை காவல்துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டு வருகின்றன. வழக்கமாக பொதுமக்கள் 100 கட்டுப்பாட்டு அறை எண்ணையே தொடர்பு கொண்டு தெரிவிப்பார்கள். தற்போது பொதுமக்களுக்கு உடனே உதவி கிடைக்கும் வகையிலும் இரவு நேர குற்றங்களை தடுக்கும் விதத்தில் தொலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளோம்.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் பிரச்னை ஏற்பட்டால், உடனே காவல் ஆய்வாளர்களை தொடர்பு கொள்ளலாம். சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்து புகார் தெரிவிப்பவரின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: ஊரடங்கை கடுமையாக்கும் விவகாரம்: புதுச்சேரி அரசே முடிவெடுக்க உத்தரவு