சென்னை வில்லிவாக்கம் எம்பார்நாயுடு தெருவைச் சேர்ந்தவர் டபுள் ரஞ்சித். ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்று (மார்ச் 10) மாலை வில்லிவாக்கம் பகுதியில் ரவுடி டபுள் ரஞ்சித் அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வில்லிவாக்கம் காவல் துறையினர் ரஞ்சித்தின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலைச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கடந்த 2020ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட கருணாகரன் என்பவர் கொலைக்கு பழி தீர்க்க அக்கொலையில் தொடர்புடைய வில்லிவாக்கம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் டபுள் ரஞ்சித் ஒரு குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார். கடந்த சில தினங்களுக்கு முன் அவர் பிணையில் வெளியே வந்தது தெரியவந்துள்ளது.
எனவே கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட அலெக்ஸ்-ன் கொலைக்கு பழி தீர்க்கவே அவனது கூட்டாளிகளால் தற்போது ரவுடி டபுள் ரஞ்சித் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
தனது சகோதரரின் இருசக்கர வாகனத்தை வாங்கி கொண்டு கடைக்கு வந்த நபரை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல் சராமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியுள்ளதும் தெரியவந்துள்ளது. இரு தரப்பும் மாறி மாறி தொடர்ந்து கொலைகள் செய்துகொண்டு இருக்கும் நிலையில் நுண்ணறிவு காவல் துறையினர் அல்லது வில்லிவாக்கம் காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: நடு ரோட்டில் வெட்டிக் கொலை...! வெளியான சிசிடிவி காட்சிகள்...