சென்னை: அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், வாட்டர் கேனால் ரோட்டில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஐடி ஊழியர் சுஷ்மிதா (30). இவருக்கு திருமணம் ஆகவில்லை. சுஷ்மிதா அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வாடகைக்கு வந்துள்ளார். இவர் கடந்த மூன்று மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், இன்று (அக்.25) மதியம் வீட்டின் உரிமையாளரான அருண்குமார், அடுக்குமாடி குடியிருப்புக்கு வாடகை வாங்க வந்துள்ளார். அப்போது, சுஷ்மிதாவின் வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததையடுத்து கதவை தட்டியுள்ளார். வெகு நேரமாகியும் கதவை திறக்காததாலும், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாலும் சந்தேகமடைந்து அருண்குமார் கொரட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் அருண்குமாரிடம் இருந்த வீட்டின் மற்றொரு சாவியை பெற்று கதவை திறந்துள்ளனர். அப்போது சுஷ்மிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து உடலை மீட்ட காவல்துறையினர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்