திருவள்ளுவர்: அம்பத்தூரில் உள்ள டன்லப் தொழிற்சாலை கடந்த 50 ஆண்டுகளாக இயங்கிவந்தது. கடந்த 1959 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த டன்லப் ஆலை டிரக், லாரி, பஸ், சைக்கிள்களுக்கு தேவையான டயர்களை உற்பத்தி செய்து வந்தது. டன்லப் ஆலைக்கு அப்போதைய தமிழ்நாடு அரசு 26.03 ஏக்கர் நிலமும், அம்பத்தூரில் 65.14 ஏக்கர் நிலமும், அத்திப்பட்டு கிராமத்தில் 52.28 ஏக்கர் நிலமும், சைதை பத்திரப்பதிவு அலுவலகம் மூலம் 6.24 ஏக்கர் நிலமும் வழங்கியது.
ஆனால், நிர்வாகம் எடுத்த தவறான முடிவுகள் மற்றும் நிர்வாக பிரச்சினைகளின் காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தொழிற்சாலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2012ஆம் ஆண்டு இந்த தொழிற்சாலை நிரந்தரமாக முடப்படுவதாக நிர்வாகம் அறிவித்தது. இதனால் நேரடியாக மற்றும் மறைமுகமாக பணியாற்றி வந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.
குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்பட்டு சுமார் 9 ஆண்டுகள் கடந்த போதும் இதில் பணியாற்றியவர்களுக்கான செட்டில்மெண்ட் தொகை யாருக்கும் வழங்கப்படாமலே இருந்துவருகிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
இந்த நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களை விற்று தங்களுக்கான தொகையை வழங்க வேண்டும் என்று முன்னாள் தொழிலாளர் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் டன்லப் நிர்வாகத்துக்கு சொந்தமான நிலங்களை தனியார் நபர்கள் அபகரித்து வருவதாகவும், அவற்றில் அத்திப்பட்டு கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கிடந்த பெரும்பாலான நிலங்கள் தனியார் நபர்களால் அபகரிக்கப்பட்டு போலி பத்திரங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு விட்டதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன.
ஆனால் இதை போலீசாரும் மாவட்ட நிர்வாகமும் கண்டுக்கொள்ளாமல் இருந்து வந்தன. இந்நிலையில், அத்திப்பட்டு பகுதியில் உள்ள சுமார் 12.56 ஏக்கர் நிலத்தை அரசியல் பின்புலம் கொண்ட தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து இரும்பு தகடுகளால் வேலி போட்டு அடைத்து வைத்திருப்பதுடன், இந்த இடம் முழுவதையும் விற்பனை செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக முன்னாள பணியாளர்கள் சங்கத்தினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து முன்னாள் பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று மதியம் அத்திப்பட்டில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கூடினார்கள். அங்கு கூடிய அவர்கள் அக்கிரமிப்பு நபர்களுக்கு எதிராகவும், உடனடியாக இந்த நிலத்தை அரசு மீட்டு அதை விற்பனை செய்து அதில் வரும் பணத்தில் வேலையிழந்த தொழிலாளர்களின் நிலுவை தொகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினார்கள்.
இது குறித்து அவர்கள் கூறும் போது, நிறுவனம் மூடப்பட்டதில் இருந்து எங்கள் வாழ்வாதரம் கேள்விக்குறியாகி விட்டது. பலர் தற்கொலை செய்து விட்டனர். எங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை இந்த நிலங்கள் மட்டுமே. இவைகளை விற்பனை செய்யும் போதாவது நிலுவையில் உள்ள பணப்பலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்துவந்தோம்.
ஆனால் அரசியல் பின்புலம் கொண்ட ஒரு சிலர் இந்த நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும், அதை விரைவில் பிளாட் போட்டு விற்பனை செய்ய முயற்சித்து வருவதாகவும் தகவல் வந்தது. இதற்கு காவல் துறையினரும் துணைபோவதாகவும் தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டம் நடத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொழிற்சங்க அமைப்புகளுடன் இந்த பகுதியில் வந்து அமர்ந்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: Pandora Papers: இந்திய பிரபலங்களின் முகத்திரையைக் கிழித்த பண்டோரா ஆவணங்கள்