இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடித்துவருகிறது. அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை புயலாக வலுவடைய கூடும். அதன்படி அந்தப்புயல் வரும் 17ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து, 18ஆம் தேதி வடகிழக்கு திசையில் நோக்கிச் செல்லும். அந்த காலகட்டத்தில், சூறாவளி காற்று 75 முதல் 85 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும், அதிகபட்சமாக 95 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே மேற்கு வங்க கடல் மற்றும் வங்கக்கடல், குமரிக்கடல், கச்சத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த இரண்டு நாள்களுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அதையடுத்து நாளை உருவாகும் அந்தப் புயல் வடக்கு மற்றும் வட கிழக்கு திசையை நோக்கி பயணிப்பதால் தமிழ்நாட்டில் கரையை கடக்காது என தெரிவிக்கப்படுகிறது.
ஒடிசா அல்லது வங்கதேசத்தில் இது கரையை கடக்க கூடும். குறிப்பாக நாளை உருவாக உள்ள இந்தப் புயலுக்கு தாய்லாந்து நாடு ஏற்கனவே ஆம்பன் என பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும்!