சென்னை: தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவர் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா ரஹீம், இன்று(மே.3) சென்னை தலைமைச் செயலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தடா ரஹீம், "தமிழ்நாட்டில் வக்பு வாரியத்திற்கு கோடிக்கணக்கான சொத்துகள் இருக்கின்றன. ஆனால், ஒவ்வொரு முறையும் வக்பு வாரியத்திற்குத் தலைவராக வருபவர்கள் ஊழலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது வக்பு வாரியத்தின் தலைவராக முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் இருந்து வருகிறார்.
இவர் வக்பு வாரியத் தலைவராக பதவியேற்றது முதல் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு பள்ளிவாசல்களில் நிரந்தரத் தலைவராக இருப்பவர்களைக் கூட, நீதிமன்ற உத்தரவை மீறி நீக்கம் செய்துவிட்டு தனது கட்சியைச் சேர்ந்தவர்கள், தனக்கு ஆதரவாளர்களை அந்தப் பொறுப்பில் நியமித்து வருகிறார்.
சென்னை புளியந்தோப்பு, கடலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருக்கிற வக்பு வாரியத்திற்குச் சொந்தமான நிலங்களை பிளாட்டுகளாக மாற்றி விற்பனை செய்ய முயற்சிப்பதுடன், அந்த சொத்துகளை முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறார்.
தற்போதுள்ள வக்பு வாரியத் தலைவரின் முறைகேடுகளை ஆதாரத்துடன் தலைமைச் செயலாளரிடம் புகார் கொடுத்துள்ளோம். முறைகேடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வக்பு வாரியத் தலைவர் மற்றும் அவருக்கு துணை புரியும் உறுப்பினர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வக்பு வாரிய சொத்துகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் வருமானத்தால் அரசை நடத்த வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி!