சென்னை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செப்.29ஆம் தேதி மகப்பேறு பிரிவில், மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர் வினோத் அத்துமீறி நுழைந்து, மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களை மரியாதை குறைவாக நடத்தி, மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் நடந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி சுகாதார அலுவலரை பணியிடை நீக்கம் செய்யக்கோரியும், மகப்பேறு மருத்துவர்களின் பணிச்சுமையை குறைக்கக் கோரியும், தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
மகப்பேறு மருத்துவர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில், தமிழகம் முழுவதும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் சுமார் ஆயிரம் மகப்பேறு மருத்துவர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். “மகப்பேறு மருத்துவர்களின் பணியிடங்கள் இரட்டிப்பாக்கப்பட வேண்டும். கூடுதல் மகப்பேறு மருத்துவர்கள் உடனடியாக பணியமர்த்தப்பட வேண்டும். அரசு மகப்பேறு மருத்துவர்களை மென்டாரிங் (Mentoring), முகாம்கள் போன்றவற்றில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்.
மகப்பேறு இறப்பு தணிக்கையில் (MATERNAL DEATH AUDIT) மருத்துவர்கள் அளித்த சிகிச்சை சம்பந்தமான தணிக்கையை மாநில அளவில் மூத்த மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் உயர்மட்ட குழுவை கொண்டு முறையாக நடத்த வேண்டும். மகப்பேறு இறப்பின் நிர்வாகம் சம்பந்தப்பட்ட குறைபாடுகளுக்கான தணிக்கை மட்டுமே மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர், இணை இயக்குனர், துணை இயக்குனர்களைக் கொண்டு நடத்தப்பட வேண்டும்.
தற்போது நடைமுறையில் உள்ள ஆறு விதமான தணிக்கைகளை மாற்றி ஒரே ஒரு தணிக்கை மட்டுமே நடத்தப்பட வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம் போராட்டங்களை நடத்த முடிவெடுத்து அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் மகளிர் நோய் இயல் மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் இன்று (அக்.09) போராட்டம் நடைபெற்றது.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும், மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் அனைத்து மருத்துவர்களையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பாக நோயாளிகளுக்கு பாதிப்பின்றி ஒரு மணி நேரம் மாபெரும் தர்ணா செய்தனர்.
தொடர்ந்து “தணிக்கை கூட்டங்கள், ஆய்வுக் கூட்டங்கள், இன்சூரன்ஸ் கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கூட்டங்களும் புறக்கணிக்கப்படும். சீமாங் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் அறிக்கைகள் அனுப்புவது நிறுத்துதப்படும். நேரடியாகவோ, காணொளி வாயிலாகவோ மகப்பேறு மருத்துவர்கள் MENTORING செய்வது நிறுத்துத்தப்படும். அனைத்து விதமான முகாம்களும் புறக்கணிக்கப்படும்.
நிர்வாகம், அறிக்கைகள், இன்சூரன்ஸ், தேசிய சுகாதார திட்டம் உள்ளிட்ட அனைத்து வகையான வாட்சப் குழுக்களில் இருந்தும் மருத்துவர்கள் வெளியேறுவர். அக்டோபர் 16ஆம் தேதி திங்கட்கிழமை முதல் தமிழகத்தின் அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் மகப்பேறு பிரிவில், அவசரமில்லா அனைத்து அறுவை சிகிச்சைகளும் நிறுத்தப்படும்” எனவும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அரியலூர் நாட்டு பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் பலி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!