சில தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் குறிப்பிட்ட பிரதான பொறியியல் பட்டப்படிப்புகளுக்கு இணையானது என அகில இந்தியத் தொழில்நுட்ப கழகம் அறிவிப்பு வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில், இனி உயர் கல்வியில் இணையான படிப்புகள் என்ற அறிவிப்பை இனி வெளியிடப்போவதில்லை என அகில இந்தியத் தொழில்நுட்ப கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், "2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இணையான படிப்புகள் குறித்த அறிவிப்புக்குப் பின், தங்களுடைய படிப்புகளுக்கு இணையான படிப்பு வழங்கக்கோரி, பல்வேறு கல்வி நிறுவனங்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதனால், சில தொழில்நுட்ப பட்டப்படிப்புகள், குறிப்பிட்ட பொறியியல் பட்டப்படிப்புகளுக்கு இணையானது என்ற அறிவிப்பினை நாங்கள் இனி வழங்கமாட்டோம். உயர் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் கல்வித்தகுதி, விண்ணப்பித்துள்ள படிப்புக்குத் தகுதியானதாக என்பது குறித்து, அந்தந்த கல்வி நிறுவனங்கள் இனி முடிவு செய்துகொள்ளலாம்.
அதேபோல தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளுக்குச் செல்லும் நபர்களின் படிப்பு, வேலைவாய்ப்பிற்குரியதா? இணையானதா? என்பதை வேலை வழங்கும் நிர்வாகங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
இணைப்படிப்புகள் குறித்த விரிவான தகவலை, ஏஐசிடிஇ (AICTE) இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரூர் அரசு கலைக் கல்லூரி மதிப்பெண் பட்டியலில் குளறுபடி!