தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் செயல்படும் பள்ளிகளில், விஜயதசமி நாளில் பெற்றோர் தங்களது குழந்தைகளை சேர்ப்பது வழக்கம். ஆனால் சமீபகாலமாக அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டேவருகிறது. இதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் பெற்றோர் அரசுப் பள்ளிகளை தவிர்த்துவிட்டு தனியார் பள்ளிகளிலேயே தங்கள் பிள்ளைகளை சேர்க்கின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் தொடக்கக் கல்வித் துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதில், ”விஜயதசமி நாளில் கல்வியைத் தொடங்கினால் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்குமென்பதால், நாளை அதிகளவில் குழந்தைளை பள்ளிகளில் சேர்க்கும் நிகழ்வுகள் நடைபெறும். விஜயதசமியன்று பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக இருந்தாலும் அனைத்து அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளை திறந்துவைக்க வேண்டும்.
இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். விஜயதசமி அன்று முதலாம் வகுப்பிற்கு சேர்க்கை நடைபெறும் என்பதை அறிவிப்புப் பலகையில் அனைவரும் பார்க்கும் வகையில் வைக்க வேண்டும். தொடக்கப் பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. ஆகிய வகுப்புகள் நடைபெறும் என்பதையும் குறிப்பிட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
உத்தரவைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளில் உள்ள வசதிகளைப் பட்டியலிட்ட விளம்பரப் பலகையை காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வைத்துள்ளனர். மேலும் விஜயதசமி தினத்தன்று எல்.கே.ஜி., யூ.கே.ஜி. ஆகிய வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது எனவும் அப்பலகையில் கூறப்பட்டுள்ளது.