சென்னை: 2016ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, சென்னை அறநிலையத் துறை அலுவலகத்திற்கு முன்பு அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் ஆணையை நடைமுறைப்படுத்தி, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வழிவகை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனரும், பொதுச்செயலாளருமான சுப. வீரபாண்டியன் உள்ளிட்ட 300 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஆயிரம் விளக்கு காவல் நிலைத்தில் கி. வீரமணி, சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருந்துவந்தது. இந்நிலையில் தங்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்துசெய்யக் கோரி, கி. வீரமணி, சுப. வீரபாண்டியன் உள்ளிட்ட எட்டு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு, நீதிபதி நிர்மல்குமார் முன்பு நடைபெற்றது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமாரதேவன், ஜனநாயக ரீதியாகத்தான் போராட்டம் நடந்ததாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரிதான் போராட்டம் நடைபெற்றதாகவும், மேலும் இந்த வழக்கில் புகார்தாரரே விசாரணை அலுவலராக இருந்ததால் வழக்கை ரத்துசெய்ய வேண்டும் என்றும் வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, கி. வீரமணி, சுப. வீரபாண்டியன் உள்ளிட்ட எட்டு பேர் மீதான வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இணைய வழியில் நேரடி நெல் கொள்முதல்: நுகர்பொருள் வாணிபக் கழகம் சுற்றறிக்கை