சென்னை காவல் ஆணையராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த ஏ.கே. விஸ்வநாதன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று மதுரை மாநகர ஆணையர் உள்பட 38 காவல் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை புதிய காவல் ஆணையராக மகேஷ்குமாரிடம் பொறுப்பை ஒப்படைத்து விஸ்வநாதன் விடைபெற்றார்.
இந்நிலையில், அவர் காவல்துறையினருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "கடந்த 3 ஆண்டுகளாக காவலர்கள் அளித்த பங்களிப்பின் மூலம் பொதுமக்கள் நம் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள். இந்த நம்பிக்கை கிடைக்க காவல்துறையினர் அனைவரும் தங்களது உழைப்பையும், திறமையையும் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
குறிப்பாக சிசிடிவி-யை பொருத்தியதன் மூலம் இந்தியாவிலேயே பாதுகாப்பு நகரமாக உருவானதற்கு நீங்கள் சிந்திய வியர்வையை இன்று நன்றியோடு எண்ணிப் பார்க்கிறேன். புகாரளிக்க வரும் பொதுமக்களிடம் தனது அறிவுரையின் படி காவலர்கள் நடக்கும் விதத்தை கண்டு பொதுமக்கள் காவல்துறையினர் மீது நன்மதிப்பு பன்மடங்கு பெருகியுள்ளது என்பதை நாம் நன்கறிவோம்.
தீபாவளி, பொங்கல் சர்வதேச மகளிர் தினம் போன்ற விழாக்களை காவலர் குடும்பத்துடன் கொண்டாடிய நாள்கள் என்றென்றும் என் மனதில் நிலைத்து நிற்கும். சவாலானா பல்வேறு சூழ்நிலையிலும், கரோனா காலத்திலும் நீங்கள் முன் வரிசையில் நின்று சிறப்பாக பணியாற்றியிருக்கிறீர்கள். அதற்கு உங்கள் குடும்பத்தினர் உற்ற துணையாக இருந்தார்கள். அவர்களுக்கு எனது நன்றியும் பாராட்டுக்களையும் உரித்தாக்குகிறேன்.
நான் விடைபெறும் நோக்கில் மீண்டும் உங்களை அதே பொறுப்புணர்வுடனும், கடமையுணர்வுடனும், சகோதரத்துவத்துடனும் மக்களை அணுக வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, சென்னை பெருநகர் காவல் துறையின் மாண்பினை மேலும் வலுப்படுத்த வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வீடியோ கால் மூலம் என்னிடம் புகாரளிக்கலாம் - காவல் ஆணையர் மகேஷ் குமார்