சென்னை: தாய்லாந்தில் தலைநகர் பாங்காக்கலிருந்து, தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று (ஜனவரி 13) வந்தது. அதில் வந்த பயணிகளை வழக்கம் போல் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது விமானத்தில் வந்த பயணி ஒருவர், தன்னுடைய இரண்டு லக்கேஜ்களை விமான நிலையத்தில், சுங்கச் சோதனை பிரிவிலேயே விட்டுவிட்டு, விமான நிலையத்தை இருந்து தப்பி விட்டார். அனைத்து பயணிகளும் சென்ற பின்பு, இரண்டு லக்கேஜ்கள் கேட்பாரற்று கிடைப்பதை அதிகாரிகள் பார்த்து, இந்த லக்கேஜ் யாருடையது என்று விசாரித்தனர். ஆனால் யாரும் உரிமை கோரி வரவில்லை.
இதனால் அந்த லக்கேஜ்களை வெடிகுண்டுகள் வெடி மருந்து ஏதாவது இருக்கிறதா என்று முறைப்படி சோதனை நடத்தினர். அவ்வாறு அபாயகரமான பொருட்கள் எதுவும் இல்லை என்று தெரிய வந்தது. அதன்பின்பு அதை திறந்து பார்த்தபோது, அந்த இரண்டு லக்கேஜ்களிலும் பிளாஸ்டிக் கூடைகளுக்குள் உயிருடன் இருக்கும் பாம்புகள் நெளிந்து கொண்டிருந்ததால், சுங்கத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
அதன்பின்பு சுதாகரித்துக் கொண்டு, கூடுதல் ஊழியர்களுடன், 45 மலைப் பாம்பு குட்டிகள், 3 மார்மோசட் குரங்குகள், இரண்டு நட்சத்திர ஆமைகள், எட்டு பாம்புகள் இருந்தன. மொத்தம் 58 அபாயகரமான உயிரினங்கள் பிடித்தனர். அதன் பின்பு சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வன குற்றப்பிரிவு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் வந்து ஆய்வு செய்துவிட்டு, இவைகளை இந்தியாவுக்குள் அனுமதிக்க முடியாது. உடனடியாக மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு அனுப்பி வைக்கும் படியும் உத்தரவிட்டனர். அதோடு இந்த பிளாஸ்டிக் கூடைகளை எடுத்து வந்த பயணியை கண்டுபிடிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது சம்பந்தமாக மத்திய வனக் குற்றப்பிரிவு துறையும், சுங்கத்துறையும் இணைந்து வழக்கு பதிவு செய்து, தாய்லாந்து நாட்டிலிருந்து பாம்புகளை கடத்திக் கொண்டு வந்து விட்டு, சென்னை விமான நிலையத்தில் போட்டு விட்டு ஓட்டம் பிடித்த அந்த கடத்தல் ஆசாமியை கண்டுபிடித்து, கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: BOMB: பீகாரில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் - பயங்கரவாத சதித்திட்டம் எனத் தகவல்!