சென்னை: குவைத் நாட்டிலிருந்து குவைத் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் வழக்கமான சோதனைகளுக்காக குடியுரிமை சோதனை மற்றும் சுங்கச் சோதனை பிரிவுக்குச் சென்றனர். அப்போது தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், அந்தப் பகுதியிலிருந்து மிகுந்த பதற்றத்துடன் வெளியேறிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு, அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் குறிப்பிட்ட விமான ஊழியருக்கு தற்போது பணி இல்லாததை உணர்ந்த பாதுகாப்பு படையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது சரியான பதில் அளிக்கவில்லை.
இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், அவரை சோதனையிட்டனர். அப்போது அவருடைய பேண்ட் பின் பாக்கெட்டுகளில் 5 தங்கச் செயின்கள் மற்றும் ஒரு தங்க டாலர் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து தங்க நகைகளை பறிமுதல் செய்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பிடிபட்ட விமான ஊழியரிடம் விசாரணை செய்தனர்.
அப்போது அவர், "குவைத் விமானத்தில் வந்த ஆந்திர பயணி ஒருவர் இந்த தங்க நகைகளை கடத்தி வந்தார் எனவும், அதனை தன்னிடம் கொடுத்து சுங்கச் சோதனை முடிந்து வெளியில் வந்து வாங்கிக் கொள்வதாக கூறினார்" எனவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், கடத்தல் பயணிக்கு துணை போன தனியார் விமான நிறுவன ஊழியரை பிடித்து, மேல் நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து இது குறித்து வழக்குப் பதிவு செய்த விமான நிலைய சுங்கத்துறையினர், தனியார் விமான நிறுவன ஊழியரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் குவைத்தில் இருந்து இந்த தங்க நகைகளை கடத்தி வந்த ஆந்திர பயணியையும் தேடி வருகின்றனர்.
இதேபோல் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி இலங்கைப் பயணியின் 2.6 கிலோ தங்கத்தை விமான நிலையத்தின் ஹவுஸ் கீப்பிங் பிரிவில் பணிபுரியும் ஊழியர் வெளியில் கொண்டு செல்ல உதவி சிக்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தங்கம் கடத்தலுக்கு உதவிய விமான நிலைய ஊழியர்.. சென்னையில் கடத்தல் ஆசாமிக்கு வலைவவீச்சு!