சென்னை : சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி அதிமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி. முனுசாமி நேரம் இல்லாத நேரத்தில் பேச முற்பட்டார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் சில பிரச்சினை குறித்து பேச முற்பட்டார்.
ஆனால், சபாநாயகர் அனுமதி மறுத்தார். அப்போது எதிர்க்கட்சி தலைவர், அவைமுன்னவர் துரைமுருகன் ஆகியோரிடையே சில விவாதம் நடைப்பெற்றது. இவை அனைத்தையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கிடையே அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி,
சட்டப்பேரவையில் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் குறித்து பேரவையில் கே.பி.முனுசாமி அவர்கள் எழுப்ப முயற்சித்ததாகவும், வேளாண் விளை பொருள்கள் சந்தைபடுத்துதல் சட்ட முன்வடிவை கொண்டு வந்துள்ளார்கள் என்றும், தொடர்ந்து வலியுறுத்தியும் பேசுவதற்கு அனுமதி அளிக்கவில்லை எனக் கூறினார்.
மேலும், உழைக்கும் பெண்கள் உரிய நேரத்தில் வேலைக்கு சென்று வீடு திரும்ப உதவியாக அதிமுக அரசால் தொடங்கி வைக்கப்பட இரு சக்கர வாகன திட்டத்தை இந்த அரசு கைவிட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இதைக் கண்டித்தும் வெளி நடப்பு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, காமராஜர் சாலையில் அமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து வந்ததாகவும், தற்போது அங்கிருந்த ஏணியை அகற்றி உள்ளனர் என்றும், அங்கு மாலை அணிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு பல்வேறு கட்டுபாடுகளை கொண்டு வந்து அந்தத் திட்டதை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர், ஜெயலலிதா பெயரில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தையும் முடக்கி உள்ளனர் என்றார்.
இதையடுத்து, பள்ளிக்கு வரும் மாணவர்கள் பாதுகாப்புடன் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெற்றோர் உரிய அறிவுறுத்தல்கள் வழங்குவதோடு, அரசு அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (புதன்கிழமை) காலை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, ஆதித்திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.
மாலை 5 மணிக்கு கூடும் கூட்டத்தில் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. அமைச்சர்கள் எஸ்.எஸ். சிவசங்கர், கே.எஸ். மஸ்தான், என். கயல்விழி செல்வராஜ், ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், டி. மனோ தங்கராஜ் ஆகியோர் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.
இதையும் படிங்க : சிஏஏ சட்டத்தை ரத்து செய்யக்கோரி தீர்மானம்!