சென்னை: ஒற்றைத் தலைமையை (AIADMK Single leadership issue) மீண்டும் கொண்டு வந்ததன் மூலம் கட்சியின் பழைய நிலையே மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், நிர்வாகிகளை நியமித்து இணையாக கட்சி நடத்தும் நபர், பதவிப்பசி காரணமாகவே வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் விமர்சித்து அதிமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களையும், பொதுச் செயலாளர் தேர்தலையும் எதிர்த்து பன்னீர்செல்வம் அணியினர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அடங்கிய அமர்வு முன்பு ஒரு மாத இடைவெளிக்கு பின் இன்று (ஜூன் 08) மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், 'கட்சி விதிப்படி, கட்சி விவகாரங்கள் தொடர்பாக பொதுக்குழு எடுக்கும் முடிவுகளே இறுதியானது எனவும், கட்சியின் அனைத்து முடிவுகளையும் அடிப்படை தொண்டர்களிடம் கேட்டு எடுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
கட்சியின் கொள்கை உள்ளிட்ட விவகாரங்களை மட்டுமே பொதுக்குழு தீர்மானிக்க முடியும் என்பதல்ல எனவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது எனக் குறிப்பிட்டார். கட்சியின் உறுப்பினர் முதல் நிர்வாகிகள் வரை கட்சி விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள். கட்சியின் விதிகளுக்கு மேலானவர்கள் யாரும் இல்லை. கட்சி விதிகளை மீறினால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் வாதிட்டார்.
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தாக கூறினாலும் கூட, அவர்களை விட உச்சபட்ச அதிகாரம் கொண்டது 'பொதுக்குழு' எனக் குறிப்பிட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் எம்.எல்.ஏ.வாக செயல்படுவது மனுதாரர்களுக்கு எப்படி பாதிப்பை ஏற்படுத்தியது என்பது விளக்கப்படவில்லை எனவும், மாநிலம் முழுவதும் தனியாக நிர்வாகிகளை நியமித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் எப்படி கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து நிவாரணம் கோர முடியும் எனத் தெரியவில்லை என்றார்.
ஒன்றரை கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சியில், 2,500 பேர் கொண்ட பொதுக்குழு எப்படி ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்களை, உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வும், உச்ச நீதிமன்றமும் நிராகரித்து விட்டது என்றார்.
கட்சி செயல்பாடு முடங்கி விட்டது என்ற வாதம் கற்பனையானதல்ல; உச்ச நீதிமன்றமே அதை ஏற்றுக் கொண்டுள்ளது எனத் தெரிவித்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்வு செய்யப்படுகின்றனர். அடிப்படை உறுப்பினர்களின் பிரதிநிதிகளாகவே பொதுக்குழு உறுப்பினர்கள் செயல்படுகின்றனர் எனத் தெரிவித்த மூத்த வழக்கறிஞர், ஒற்றைத் தலைமை கட்சி விதிகளுக்கு எதிராக இல்லை எனவும், கட்சி அடிப்படை விதிகளை மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது எனவும் வாதிட்டார்.
கட்சி செயல்பாடு தொடர்ந்து முடங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருங்கிணைப்பாளர் நியமனத்துக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் ஓபிஎஸ் எந்த உரிமையும் கோர முடியாது எனவும், ஒற்றைத் தலைமையை மீண்டும் கொண்டு வந்ததன் மூலம் கட்சியின் பழைய நிலையே மீட்டெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
கட்சி விதிகளின்படியே, விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் எந்த தவறும் இல்லை எனவும் குறிப்பிட்டார். பன்னீர்செல்வம் ஒரு காலத்தில் தலைவராக, முதலமைச்சராக இருந்திருக்கலாம். தலைவர்கள் வரலாம்; போகலாம். மக்களின் விருப்பப்படிதான் கட்சி தொடர வேண்டும் எனவும், அனைத்து நடவடிக்கைகளும் கட்சி நலன் கருதியே எடுக்கப்பட்டன எனவும் வாதிட்டார்.
நிர்வாகிகளை நியமித்து இணையாக கட்சி நடத்தும் நபர், பதவிப்பசி காரணமாகவே இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்' எனவும் விமர்சித்து, வாதங்களை நிறைவு செய்தார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் தலைமை வழக்கறிஞருமான விஜய் நாராயண் வாதங்களுக்காக வழக்கு நாளை (ஜூன் 9) தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள், வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு: முதலமைச்சர் ஸ்டாலின்