சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறைக்கு ஆதரவு தெரிவிப்பதாக இந்திய சட்ட ஆணையத்துக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மத்திய பாஜக பல ஆண்டுகளாக ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் நிறைவு பெற்றதில் இருந்து ஈபிஎஸ், பலமுறை 2024ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையை மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக கூறி வந்தார். இதனால் இன்னும் சிறிது காலத்திற்கு தான் திமுக ஆட்சி இருக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்திய சட்ட ஆணையம் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற முறைக்கு கருத்து கேட்டு அதிமுகவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது. இதற்கு ஜனவரி 16ஆம் தேதிக்குள் பதில் அளிக்கவும் அதில் குறிப்பிட்டிருந்தது. இதற்கு அதிமுக சார்பாக பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையை கொண்டு வருவதற்கு அதிமுக ஆதரவு தெரிவிக்கிறது" என பதில் அனுப்பியுள்ளார். ஏற்கனவே 2024ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்கும் என்று ஈபிஎஸ் கூறியதைப் போல சட்ட ஆணையத்தின் கடிதம் இருந்ததால் முதல் கட்சியாக அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பினர் இடையே ஒற்றை தலைமைக்கான யுத்தம் தொடர்ந்து கொண்டிருப்பதால், "நாங்கள் தான் உண்மையான அதிமுக" என்று நிரூபிக்கும் விதமாக ஈபிஎஸ் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சட்ட ஆணையம் அனுப்பிய கடிதத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேசிய ஒற்றுமை நடைபயணத்தில் காங்கிரஸ் எம்பி உயிரிழப்பு