அதிமுக பொதுக்குழு நடத்துவது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை காலை (திங்கட்கிழமை) தீர்ப்பளிக்க உள்ளது.
கடந்த 23ஆம் தேதி வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழுவினால் பூவிருந்தவல்லி- மதுரவாயல் இடையே வெகு நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் நாளை வானகரத்தில் நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுவை ஒட்டி கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரையிலான சாலையில் அதிக வாகனங்கள் செல்லக்கூடும் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பாக வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாகன ஓட்டிகள் பூந்தமல்லி முதல் கோயம்பேடு வரையிலான சாலையில் நாளை காலை 06.00 மணி முதல் மாலை 04.00 மணி வரையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாத வண்ணம்,தங்களது பயணங்களை முன்னேற்பாடாக மாற்றி அமைத்துக் கொள்ளவும், மாற்று பாதையில் செல்லவும் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் சரட்கர் கூறுகையில் கீழ்ப்பாக்கம்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் போக்குவரத்து நெரிசலை பொறுத்து அதற்கு ஏற்றார் போல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு - பொதுக்குழு நடத்த ஏற்பாடுகள் தீவிரம் - உச்சகட்ட பரபரப்பில் இபிஎஸ், ஓபிஎஸ் அணி!