சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக ஓபிஎஸ் சொந்த ஊருக்கு சென்ற நிலையில், அதிமுக தலைமை நிலையச் செயலாளர் நேற்று (ஜூன்.26) ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் , "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இன்று (ஜூன்.27) திங்கட் கிழமை காலை 10 மணிக்கு, தலைமைக் கழகம் - புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகை கூட்ட அரங்கில், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த அறிக்கையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.
மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை எடப்பாடி பழனிசாமியின் கட்சிப்பதவியான தலைமை நிலையச் செயலாளர் என்று குறிப்பிட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், எடப்பாடி பழனிசாமியை ஒற்றைத் தலைமையக தேர்வு செய்வதற்கான பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி தரப்பு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.