சென்னை: திரையில் அசாத்தியமாக நடிக்கும் ரஜினி, நிஜ வாழ்க்கையிலும் அதைச் செய்துள்ளார். கட்சித் தொடங்கப்போவதில்லை என ரஜினி எடுத்திருக்கும் முடிவினை பெரும்பாலான கட்சிகள் வரவேற்றுள்ளன. அண்மையில் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து புத்தாண்டுக்கு முன்னதாக அவர் கட்சித் தொடங்கும் தேதியை அறிவிப்பாரா என்ற சந்தேகம் இருந்தது.
திரைக்கவர்ச்சியிலிருந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த எம்ஜிஆர் பிறந்த தேதியான ஜனவரி 17ஆம் தேதி மதுரையில் பிரமாண்ட மாநாடு ஒன்றை ரஜினி நடத்தவிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், ரஜினியின் முடிவால் இவை அனைத்தும் வீணாகிப்போனது.
ரஜினியின் இந்தத் திடீர் முடிவு பாஜகவின் மனநிலையை மோசமாக்கிவிட்டது எனலாம். ரஜினி முடிவு குறித்து கருத்து தெரிவிக்க பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் கருத்து தெரிவிக்க மறுத்த நிலையில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ரஜினியின் முடிவு மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாக தெரிவித்தார். இருப்பினும், ரஜினியின் முடிவை நாம் ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ரஜினி அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக அறிவித்தது முதல் திமுக, நாதக, காங்கிரஸ் இடதுசாரிக்கட்சிகள் ரஜினியின் அரசியல் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்துவந்தன.
அதுமட்டுமல்லாமல், ரஜினியை கட்சி தொடங்கச்சொல்லி பாஜக அழுத்தம் கொடுத்தது எனத் தொடர்ந்து அந்தக் கட்சிகள் அனைத்தும் கூறிவந்தன. இதற்கு வலுசேர்க்கும்விதமாக, அரசியல் நோக்கர்கள் அமித் ஷா சென்னை வந்து சென்ற 15 நாள்களுக்குள் ரஜினி கட்சி தொடங்குவது, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவித்ததை சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், சமூக வலைதளங்களில், அவர் பாஜகவின் கைப்பாவையாக இருக்கிறார் என மீம்ஸ்கள் அதிகளவில் சுற்றிவந்தன.
"தமிழ்நாட்டில் பிரபலமான முகம் பாஜகவுக்கு இல்லாததால், ரஜினியை வைத்து தமிழ்நாட்டில் வலதுசாரி அரசியலுக்கான வெளியை விரிவுபடுத்தவும், பின்னர், அதில் தன்னை பொறுத்திக்கொள்ளவும் ரஜினியை பயன்படுத்தியது. ஆனால், பாஜகவின் முயற்சி பலனளிக்கவில்லை. பாஜகவிலுள்ள இரண்டாம் கட்டத் தலைவர்கள் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் எனக் குரல் கொடுக்கின்றனர். ஆனால், அது பயனற்றது" என்கிறார் அரசியல் ஆய்வாளர் ஆழி செந்தில்நாதன்.
அதிமுக ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பைப் பிரிக்கும் ஆற்றலை ரஜினியின் அரசியல் வருகைகொண்டிருந்தது. அதே நேரத்தில், பாஜகவினர் ரஜினி தலைமையில் பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் என மூன்றாம் அணிக்கனவில் மிதந்திருந்தனர். அது அத்தனையும் தற்போது தவிடுபொடியாகியுள்ளது. ரஜினியின் முடிவால் இரண்டு திராவிட கட்சிகளும் நிம்மதி அடைந்துள்ளது. அதிமுக மீது அதிகாரம் செலுத்த பாஜகவுக்கு இருந்த ஒரு துருப்புச்சீட்டை இழந்துள்ளது.
"ரஜினி தன்னை எப்போதும் வலதுசாரிகளுடன் அடையாளப்படுத்திக்கொண்டார். பாஜக ரஜினியைக் காட்டி இனி அதிமுகவின் மீது அழுத்தத்தைச் செலுத்த முடியாது. அதிகாரப்பகிர்வு என்ற சூத்திரத்தையும் கையில் எடுக்க முடியாது. பாஜக ரஜினி என்கிற துருப்புச்சீட்டை இழந்துள்ளது.
மேலும், கூட்டணி அரசுக்கான பாஜகவின் கோரிக்கையை அதிமுக நிராகரித்துள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களுக்குப் பின்பு ரஜினிகாந்த் மீது ஏறி சவாரி செய்யலாம் என்ற பாஜகவின் எதிர்பார்ப்பு அக்கட்சிக்கு பின்னடைவாக மாறியுள்ளது" என்கிறார் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸில் கற்பிக்கும் சி. லட்சுமணன்.
கடந்த காலங்களில் பாஜகவுக்கு ஆதரவான நிலையை எடுத்ததுபோல், ரஜினி ஒரு நிலையை எடுப்பார் என பாஜக நம்புகிறது. ஆடிட்டர் குருமூர்த்தியும் தனது எதிர்பார்ப்பை தனது ட்விட்டர் பதிவில் சூசகமாக வெளிப்படுத்தியும்விட்டார்.
ரஜினி தனது அரசியல் துறவை உடைப்பாரா? என்பதைப் பார்க்க ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவிப்பதை பார்க்க எவ்வளவு காலம் காத்திருந்தோமோ அதேபோல காத்திருக்க வேண்டும்.
இதையும் படிங்க: 'தலைவன் உயிர்தான் முக்கியமே தவிர கட்சி முக்கியமல்ல!'