சென்னை: சென்னையைச் சேர்ந்த டாக்டர் அகர்வால் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆப்டோமெட்ரி (DAIO), லயோலா ஐகாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியுடன் (LICET) இணைந்து பிஎஸ்சி ஆப்டோமெட்ரி பட்டப்படிப்பினை வழங்க உள்ளது.
டாக்டர் அகர்வால்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆப்டோமெட்ரி கல்வி நிறுவனம் பிஎஸ்சி ஆப்டோமெட்ரி 4 ஆண்டுகள் பட்டப்படிப்பை வழங்கி வருகிறது. இதில் 3 ஆண்டுகள் கல்வி வகுப்புகள் மற்றும் 1 ஆண்டு பயிற்சி வகுப்புகள் ஆகும். பிஎஸ்சி ஆப்டோமெட்ரி கல்வித் திட்டத்தில் சேர்வதற்கு 12ஆம் வகுப்பில் உயிரியல் உட்பட, அறிவியல் பிரிவில் குறைந்தபட்சம், 60 சதவீதம் மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முதுநிலை கல்வித் திட்டத்தில் சேர, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்களுடன் ஆப்டோமெட்ரி இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிஎஸ்சி ஆப்டோமெட்ரி, எம்எஸ்சி ஆப்டோமெட்ரி, ஃபெல்லோஷிப் மற்றும் இன்டெர்ன்ஷிப் ஆகியவற்றில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை லயோலா கல்லூரியுடன் இணைந்து டாக்டர் அகர்வால்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆப்டோமெட்ரி பட்ட படிப்பினை வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இது குறித்து அகர்வால் கல்வி நிறுவனத்தின் மருத்துவர் கற்பகம் தாமோதரன் கூறும்போது, "சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் லிசெட் (LICET) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆராய்ச்சி தொடர்பான ஒத்துழைப்பை லிசெட் கல்லூரி வழங்குகின்ற நிலையில், ஆராய்ச்சியை மேற்கொள்ளத் தீவிர ஆர்வம் கொண்டிருக்கும் பல மாணவர்கள் பயனடைவர்.
தரமான ஆராய்ச்சியையும், புத்தாக்க கண்டுபிடிப்புகளையும் சாத்தியமாக்க இது உதவும். கணினிகள் மற்றும் அலைப்பேசிகளைத் தினசரி அடிப்படையில் நீண்ட நேரம் பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்துள்ளதால், தற்காலத்தில் இளைய தலைமுறையினரின் பார்வைத் திறன் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆப்டோமெட்ரி பட்டப்படிப்பு அவசியத்தையும் கொண்டிருக்கிறது. உலகத் தரத்தில் கல்வியையும், நேரடி செய்முறை பயிற்சியையும் மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காக அனுபவமும், தகுதியும் கொண்ட பார்வைத் திறன் சோதனை நிபுணர்கள் (ஆப்டோமெட்ரிஸ்ட்), கண் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையின் பிற தொழில்முறை நிபுணர்கள் உள்ளனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 7 அடி நீளம் - மாடி படியில் படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பு - போராடி மீட்ட வனத்துறை