சென்னை: இன்று (ஜூன் 28) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தின் முக்கிய நுழைவு வாயில் உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் உள்ளே செல்லுமாறு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
பின்னர், பள்ளிக்கல்வித் துறை அலுவலக வளாகத்தில் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் ரவி கூறுகையில், “கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்ற 30,000 ஆசிரியர்கள் பணி வேண்டி காத்திருக்கிறோம். ஆசிரியர் தேர்வில் தகுதி பெற்றவர்கள் பணிக்காக, மீண்டும் ஒரு போட்டித் தேர்வு எழுத வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அதேபோல் திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதி எண் 177 படி, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நியமனம் செய்ய வேண்டும். பள்ளிக்கல்வித்துறை ஆணையர் 13,331 பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் எட்டு மாதத்திற்கு நியமனம் செய்வதாக அறிவித்துள்ளார்.
அதேபோல் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டம் பெற்றவர்களை பணியில் நியமிக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இருக்கும்பொழுது, தேர்வில் தகுதி பெறாத அவர்களை நியமனம் செய்யக்கூடாது. அவர்கள் எட்டு மாதத்திற்கு பின்னர் எங்கே சென்று பிச்சை எடுப்பார்கள். அக்னிபாத் திட்டத்தை போன்று பள்ளிக்கல்வித்துறையில் தற்காலிக ஆசிரியர் நியமனம் இருக்கிறது.
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.36,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யும் பொழுது, ஆசிரியர் நியமனத்திற்கு மட்டும் நிதி இல்லை எனக் கூறுவது சரியாக இருக்காது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆத்தூர் கூட்டத்தில் 80% திட்டங்களை நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார். மீதமுள்ள 20% திட்டங்களில், ஆசிரியர் தேர்வில் தகுதி பெற்றவர்களை நியமனம் செய்வதற்கு முதல் சட்டமாக நிறைவேற்ற வேண்டும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியை கவிதா, “நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் அரசு எங்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. மேலும் தகுதியான ஆசிரியர்கள் இருக்கும்பொழுது, 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டம் பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்யக்கூடாது.” என கூறினார்.
இதையும் படிங்க: கணவனை அழைத்துவர இருசக்கர வாகனத்தில் சென்ற மனைவி: லாரி மோதி உயிரிழப்பு