சென்னை, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அங்கயற்கண்ணி ஈ டிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறியிருப்பதாவது, "ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் செயல்படக்கூடிய நபர்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டம், கொள்ளைநோய்த் தடுப்புச் சட்டம், தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஆகிய (இந்திய தண்டனைச் சட்டம் 269, 270, 271 மற்றும் 188) இந்த நான்கு வகையான சட்டங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவை சாதாரணமானப் பிரிவுகள் அல்ல. குற்றவியல் வழக்கின்கீழ் வருவதால், சட்டங்களின் விதிகளை மீறும் நபரின் ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை காவல் துறையினர் கைப்பற்றுகின்றனர். இதனால், குற்றவாளியாக சேர்க்கப்படும் நபர்களால் வழக்கு முடியும் வரை பணிக்குச் செல்ல முடியாது.
அப்படி பணிக்குச் செல்ல வேண்டும் என்றால் காவல் துறை அலுவலரின் ஒப்புதல், அறிக்கை அல்லது கடிதம் பெற்ற பிறகே செல்ல முடியும்.
இதேபோல், பாஸ்போர்ட் கைப்பற்றப்பட்டதால் கல்வி, தொழில், மருத்துவத்துக்காக வெளிநாடும் செல்ல முடியாது. அதேபோல் தனியார் நிறுவனங்களில்கூட காவல் துறையினரின் விசாரணை அறிக்கை பெற்ற பிறகே பணிக்கு அமர்த்துவதால், இவ்வழக்கில் சிக்குவோரானால், தனியார் நிறுவனங்களிலும் வேலைக்குச் சேர முடியாது. காவல்துறையோ அல்லது அதிகாரி நிலையில் உள்ளவர்களும் நீங்கள் எல்லையை மீறும்போது அவர்களே புதிய விதிகளை உருவாக்கி, உங்கள் மீது செலுத்தி தண்டனை கொடுக்க முடியும் என்று சட்டம் குறிப்பாக கூறுகிறது.
கரோனா பீதியைப் பரப்புதல் அல்லது கரோனா நோயைப் பரப்பி துன்பப்படுத்துபவர்கள் என்று மூலம் என்பது கரோனா பிரச்சனையையொட்டி இருந்தால் மட்டுமே புதிய விதிகளை செலுத்தி, காவல் துறையோ அல்லது சட்டமோ உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து முறையான நடவடிக்கை எடுக்க முடியும்.
காவல் துறை செய்கின்ற விசாரணைகளும் நடவடிக்கைகளும் கரோனா தொற்றுநோய் தொடர்பான விதிமீறல்களை மீண்டும் மீண்டும் மீறும் பொழுதோ, அதை உறுதிசெய்வதாக இருந்தால் மட்டுமே காவல் துறை முறையான வழக்கோ அல்லது இந்தச் சட்டங்களை உங்கள் மீது தொடுக்க முடியும்.
இதைத் தாண்டி எந்த ஒரு தனி மனிதனின் செயலுக்கும் அல்லது வேறு எதற்கும் இந்த சட்டம் பயன்படாது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
தேவையில்லாமல் நீங்கள் வெளியில் செல்லுபோது, வழியில் காவல் துறையினர் விசாரணை செய்யும்போது, விதிகளை மதிக்காமல் நடந்து கொண்டீர்கள் என்றால், உங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்.
வழக்குப்பதிவு செய்த பிறகு உடனடியாக உங்களைக் கைது செய்து சிறைக்கு அனுப்ப முடியாது. சொந்தப் பிணையில் விடுவிக்க முடியும். இன்றைய சூழ்நிலையில் பல்வேறு தண்டனைகள் பெற்று சிறையில் உள்ள கைதிகளையும் கரோனா நோய்த் தொற்றால் பரோலில் வெளிவந்து கொண்டிருக்கின்றனர்.
அனைவரையும் சிறையில் வைக்க முடியாத ஒரு சூழ்நிலை இப்பொழுது நிலவுகிறது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல், எல்லையை மீறி வெளியில் சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தாலும் காவல் துறையினரிடம் காவல் துறையில் வைத்தே பிணையைப் பெற்று, நீங்கள் வீடு திரும்பலாம். பிறகு அது வழக்காக விசாரணைக்கு வரும்போதோ... தீர்ப்பு வந்த பிறகோ தான் உங்களுக்கு விடுதலையா அல்லது சிறையா என்று தெரியும்.
குறிப்பாக, நம் தெரிந்துகொள்வது என்னவென்றால் இது (compoundable offence) வழக்குப்பதிந்தவர்களே மீண்டும் வழக்கை திரும்பப் பெற முடியாது. வழக்கை நடத்தி முடித்து கிடைக்கும் தீர்ப்பின்படி தான் நாம் வெளியில் வர முடியும்.
நம் மீது உள்ள இறுக்கங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய செயல் காரோனோவைப் பரப்புவதற்கான அல்லது தடுப்புச் சட்டங்களை மீறும் போது மட்டுமே காவல் துறை மேற்கூறிய நடவடிக்கைகளை நம்மீது எடுக்க முடியும்.
இந்த வழக்குகளின் மூலம் நாம் சிறைக்குச் செல்ல தேவையில்லை. கரோனாவை தாண்டி எந்த ஒரு நிலைக்கும் இந்தச் சட்டங்களை காவல் துறை, நம் மீது பயன்படுத்த முடியாது.
நாம் தெரிந்துகொள்ள வேண்டியது தனிமையில் இருந்து கொண்டு எண்ணங்களின் அடிப்படையில், நாம் மொத்த குரலையும் பதிவு செய்ய வேண்டும். அப்படித்தான் மும்பையில் தொழிலாளர்கள் போக்குவரத்து வசதியுடன் கூடிய இடம் மாற்றம் தேவை அல்லது அங்கேயே இருக்கக்கூடிய அடிப்படை வசதிகளான உணவு, உடை, இருக்க இடம் வேண்டும் என்று அவர்கள் ஒன்று சேர்ந்து போராடினார்கள். அவர்கள் ஒன்று கூடியது என்பது ஊரடங்கு உத்தரவை மீறிய செயலாக இருந்தாலும்; வேறு வழியின்றி நெருக்கடி நிலையில் அந்தப் போராட்டத்தை அவர்கள் கையில் எடுத்தார்கள்.
அதன் விளைவாகத்தான் இன்று கட்டுமானத் தொழிலாளர்கள் நகரங்களிலும் ஊர்களிலும் இருவேறு நிலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்று ஊரடங்கு உத்தரவை தளர்த்தி, கட்டுமானப்பணிகள் நடைபெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆக, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு செயலில் ஈடுபடும் போது அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கிறது. அது இந்தச் சட்டங்களின் விதிமுறைகளைப் புரிந்துகொண்டு, நாம் நமக்குள்ள உரிமையைத் தெரிந்துகொண்டு, நாம் தனிமையிலும் இருக்க வேண்டும். சட்டத்தையும் பின்பற்ற வேண்டும். அதே நேரத்தில் இதைத் தாண்டி எந்த ஒரு மனித உரிமை மீறல்கள் எந்த தளத்தில் நடந்தாலும் அதையும் நாம் எதிர்த்துப் போராட வேண்டும் என்று நம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு முக்கியமாக சொல்லுகின்ற அடிப்படை உரிமை இது.
இந்த அடிப்படை உரிமையில் முக்கியமானது வாழும் உரிமை. இது நமக்கு மிக வலுவான உரிமை. இந்த வாழும் உரிமை என்பது இன்றைக்கு நமக்குத் தேவை. தற்போது நெருக்கடியான நிலையில் உள்ளபோதும் வாழ்வதற்காக தான் இந்த நெருக்கடி நிலைகள் என்றால் வாழ்வைத் தாண்டி ஒரு நிலை உள்ளது.
உணவு, உடை, இருப்பிட வசதி இல்லை நான் இறந்து விடப் போகிறேன் என்ற நிலை வரும்போது இந்தச் சட்டங்கள் எல்லாம் எடுபடாது. அடிப்படை வசதிகளை கொடுத்துத்தான் இதுபோன்ற நெருக்கடிகளை நம் மீது கொண்டுவர முடியும்.
இந்த வசதிகள் எல்லாம் செய்து கொடுக்காமல், நாம் பட்டினி கிடந்து சாக வேண்டிய சூழ்நிலையில் இருந்தால் கூட, கரோனா நோய்த் தொற்று சட்டங்களை மதித்து தான் சாகவேண்டும் என்பது சட்டத்திற்கும் பொருந்தாது. மக்களுடைய உரிமைகளுக்கும் பொருந்தாது. ஆகையால், நாம் நினைவில் கொள்வோம். நம்முடைய அடிப்படை உரிமைகளை மீறி, எந்தச் செயல் நடந்தாலும் அதனை நாம் கேள்வி கேட்க வேண்டும்.
அனைவரும் ஒன்றிணைந்து நம் குரலைப் பதிவு செய்ய வேண்டும். இதை நாம் ஜனநாயக அடிப்படையில் செய்ய வேண்டும். நாம் இதில் தெரிந்து கொள்ள வேண்டியது எந்த அளவிற்கு இந்தச் சட்டத்தை மீறாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதைத்தான் காவல் துறையினரும் வலியுறுத்துகின்றனர். எனவே இளைஞர்களும், பொதுமக்களும் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வந்து வழக்கில் சிக்கி தற்போதுள்ள நெருக்கடியான நிலையில் வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:80% கரோனா நோயாளிகளுக்கு அறிகுறிகள் தென்படவில்லை - சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்