சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் ராயல் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகிருஷ்ணன்(58). அவரது மகள் லாவண்யா (20). தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். சில தினங்களாக லாவண்யா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவரது மருத்துவமனையிலேயே பரிசோதனை செய்து பார்த்துள்ளார். அப்போது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும்கூட பலன் அளிக்காமல் லாவண்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது பெற்றோர் கூறுகையில், 'காட்டுப்பாக்கம் பகுதியில் அதிக அளவில் மழை நீர் தேங்கி உள்ளதால் கொசுக்கள் அதிகளவில் உருவாகிறது. இதனால் டெங்குப் பாதிப்பு இந்த பகுதியில் அதிகமாக உள்ளது. அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர். அடிக்கடி ஆய்வுக்கு வரும் அதிகாரிகள், உயர் அதிகாரிகளின் வற்புறுத்தலால் சில இடங்களில் மட்டும் நடவடிக்கை என்ற பெயரில் அபராதம் விதித்து விட்டுச் செல்கின்றனர். ஆனால், அதன் பிறகு இப்பகுதியில் ஆய்வுக்கு வருவது கிடையாது' என்றார்.
மேலும், அவர் கூறும்போது, 'எனது மகளின் 10ஆவது பிறந்த நாளுக்காக இந்தப்பகுதி முழுவதும் மரக்கன்றுகள் நட்டோம். தற்போது மரம் வளர்ந்து விட்டது. எனது மகள் உயிரோடு இல்லை' என வேதனை தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெங்கு கொசுக்களைக் கொல்லும் புதிய மெஷின்..!