சென்னை: வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தவுடன் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் சீலிடப்படுவதை அதிமுகவினர் உறுதிப்படுத்த வேண்டும் என அக்கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தபால் எண்ணிக்கையே முதலில்...
அதில், “தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19ஆம்தேதி நடைபெற்று முடிந்துள்ளது. வருகின்ற பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக சார்பில் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி, வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெறும் வகையில் பணியாற்றிட வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று அதிமுக முகவர்கள் அனைவரும், அவரவர் மையங்களுக்கு காலை 6 மணிக்கு முன்பாகவே சென்றுவிட வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்தும் முறைப்படி உள்ளனவா என்பதை உறுதி செய்திட வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்திட வேண்டும்.
பதிவான வாக்குகளும், எண்ணிக்கையில் காட்டப்படும் வாக்குகளும் ஒரே எண்ணிக்கையில் உள்ளதா என்பதை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம், தபால் வாக்குகளில் இருந்து தொடங்கப்படவேண்டும் என்பதை உறுதி செய்து, தபால் வாக்குகள் எண்ணி முடித்து அறிவிக்கவேண்டும். அதன் பிறகுதான், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதிக்க வேண்டும்.
தில்லுமுல்லு திமுக
ஒவ்வொரு வார்டுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுவெளியிடப்பட்டு வெற்றிச் சான்றிதழ் வழங்கிய பிறகுதான், அடுத்த வார்டின் வாக்கு எண்ணிக்கையை தொடங்க அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் எத்தனை வாக்குகள் கிடைத்துள்ளன என்பதை எழுதிவைத்துக்கொண்டு, அதனை தேர்தல் அலுவலரிடம் சரிபார்க்க வேண்டும்.
அதன் பின்னர்தான் அடுத்த சுற்றுவாக்கு எண்ணிக்கை நடைபெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் யாரேனும் மாற்றுக் கட்சியினருக்கு ஆதரவாகவும், முறைகேடாகவும் செயல்படுகிறார்களா என்பதை உன்னிப்பாகக் கண்காணித்து, குறைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட மேலலுவலருக்கு உடனடியாக தகவல் தெரிவித்து தீர்வு காண வேண்டும்.
திமுகவினர் வதந்திகளைப் பரப்புவதிலும், தில்லுமுல்லு செய்வதிலும், வன்முறையில் ஈடுபடுவதிலும் மிகவும் கைதேர்ந்தவர்கள் என்பதை இந்த நாடே நன்கு அறியும். இதற்கு கடந்த காலங்கள், தற்போது நடைபெற்றுவரும் நிகழ்வுகளை உதாரணமாகச் சொல்லலாம். ஆகவே, வாக்கு எண்ணும் மையங்களில் திமுகவினரால் தில்லுமுல்லுகள் ஏதேனும் நடத்தப்படுகிறதா என்பதை மிகுந்த விழிப்போடு கண்காணிக்க வேண்டும்.
கண்காணிப்பு கேமராவுக்கு சீல்
அவ்வாறு முறைகேடுகள் ஏதேனும் நிகழ்ந்தால் மேலலுவலருக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்து தீர்வு காண வேண்டும். அதிமுக, கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், முதன்மை முகவர்கள் ஆகியோர் வாக்கு எண்ணும் பணி முறையாக நடைபெறுகின்றனவா என்பதை விழிப்போடு கண்காணிக்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும், அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அங்கிருந்து வெளியே வர வேண்டும். வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தவுடன், அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்டத் தேர்தல் அலுவலரின் முன்னிலையில் சீலிடப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும்'- முதலமைச்சர் ஸ்டாலின்