புதுடெல்லி: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கே.பி.முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்தனர். இவ்விருவரின் ராஜினாமாவை மாநிலங்களவைத் தலைவர் ஏற்றுக் கொண்டதாக, மாநிலங்களவை பொதுச் செயலாளர் தேஷ் தீபக் வர்மா அறிவித்துள்ளார்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களான கே.பி.முனுசாமி வேப்பனஹள்ளி தொகுதியிலும், ஆர்.வைத்தியலிங்கம் ஒரத்தநாடு தொகுதியிலும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றனர். இரண்டு அவைகளிலும் ஒரே நேரத்தில் உறுப்பினர்களாக இருக்க முடியாது என்பதால் ஏதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை உருவானது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக வைத்தியலிங்கம் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார். அவருக்கு ஓராண்டு மட்டுமே மீதமிருப்பதால், அவர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை தேர்வு செய்யலாம் என கருதப்பட்டது. கே.பி.முனுசாமி, கடந்தாண்டு தான் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் மீதமுள்ளன.
இருவரும் மாநிலங்களவை உறுப்பினராகத் தொடர்வார்களா அல்லது பதவியை ராஜினாமா செய்து, சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றுவார்களா என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இருவரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால் ஒரத்தநாடு, வேப்பனஹள்ளி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும்; எம்.பி பதவியை ராஜினாமா செய்தால், அவர்களின் மீதமுள்ள பதவிக் காலத்திற்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படும்.
இந்தநிலையில், வேப்பனஹள்ளி தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கே.பி.முனுசாமியும், ஒரத்தநாடு தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வைத்தியலிங்கமும், தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அண்மையில் ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை அளித்தனர்.
இந்த நிலையில், இவ்விருவரின் ராஜினாமாவை மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு ஏற்றுக் கொண்டதாக, மாநிலங்களவை பொதுச் செயலாளர் தேஷ் தீபக் வர்மா தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து மே 7 ஆம் தேதி முதல் இரு இடங்களும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. மாநிலங்களவை உறுப்பினராக இருந்த முகமது ஜான், உடல் நலக்குறைவால் மறைவானதை அடுத்து, தற்போது காலியான இரு இடங்கள் சேர்த்து மொத்தம் மூன்று இடங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.