சென்னை: பா. சிவந்தி ஆதித்தனாரின் 10ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், கர்நாடகாவில் ஹெலிகாப்டரில் அண்ணாமலை பணம் எடுத்துச் சென்றது தொடர்பான கேள்விக்கு, "அதை நீங்கள் அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும். அதற்கு நான் பதில் சொல்ல முடியாது" எனக் கூறினார்.
சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் குறித்து உதயநிதி பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த ஜெயக்குமார், "உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சர் கிடையாது, விளையாட்டுப் பிள்ளை அமைச்சர். அவருக்கு கொடுத்தது தகுதியை மீறிய பதவி, அவர் பதவியின் கண்ணியம் தெரியாமல் வாய்க்கு வந்ததை உளறி வருகிறார்.
இளம் கன்று பயம் தெரியாது என்பதை சொல்வது போல் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைத்து, எல்லா மூத்த தலைவர்களையும் அவமானப்படுத்துவதை தான் உதயநிதி, விளையாட்டுப் பிள்ளையாக செய்து வருகிறது" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், "வழக்குகளுக்கு அஞ்சாதவர்கள் அதிமுகவினர் என்றால், வழக்குகளுக்கு அஞ்சுபவர்கள் திமுகவினர். சென்னை நொச்சிக்குப்பம் மீனவர்களை காக்க திமுக அரசு தவறிவிட்டது. 5 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் மீனவர்களுக்கு என்ன பதில் அளித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் மீனவர்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தனர். தமிழ்நாட்டில் மருத்துவத்துறை என்ற துறை இருக்கிறதா என்றே தெரியவில்லை. அமைச்சர் மா.சு.விற்கு மாராத்தான் என்ற டிபார்ட்மென்ட்டை உருவாக்கி கொடுக்கலாம். அந்த மாராத்தான் டிபார்ட்மென்டுக்கு அவரை அமைச்சராக போட்டிருந்தால் ஓடிக்கொண்டே இருந்திருப்பார்.
அவரை மருத்துவத்துறையைப் பார்க்க வேண்டும் என்று சொன்னால் எப்படி பார்ப்பார். அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடும், மருத்துவர்கள் தட்டுப்பாடும் உள்ளது. இந்த அரசாங்கமே போலி, அப்புறம் எப்படி போலி மருத்துவர்களை ஒழிக்க முடியும்.
அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருந்துகள் இருப்பதால் அரசு மருத்துவமனைகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் தொடங்கட்ட அம்மா மினி க்ளினிக்குகள் மூடப்பட்டதே போலி மருத்துவர்கள் அதிகரிப்பதற்குக் காரணம்.
தமிழ்நாட்டில் கஞ்சா, பிரவுன் சுகர் விற்பனை சர்வ சாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது. சமூக விரோதிகள் தமிழகத்தில் துளிர விட ஆரம்பித்து விட்டனர். திமுகவினரே சட்டத்தை கையில் எடுத்து சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொள்கின்றனர். இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதை முதலமைச்சர் நினைக்க வேண்டும். முதலமைச்சருக்கே நாட்டில் என்ன நடக்குது என்று தெரியாமல் ஒரு பொம்மை முதலமைச்சராக இருந்தால் நாடு கெட்டு குட்டிச்சுவராகத் தான் போகும்" என கூறினார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு எம்.ஏ. படித்து இருக்கிறார் என்று சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது குறித்தான கேள்விக்குப் பதிலளித்த ஜெயக்குமார், "பெருந்தலைவர் காமராஜர் படிக்காத மேதை. அவரையும் இவரையும் ஒப்பிட வேண்டாம். ஐந்தாவது படித்துவிட்டேன் என்று சொல்லிட்டு போக வேண்டியது தானே. அதில் என்ன வீணான தற்பெருமை.
அதனால் யாரும் உங்களை இழுக்காக நினைக்கமாட்டார்கள். நான் படித்ததை நான் சொல்லிவிடுகிறேன். நீங்கள் படித்ததை நீங்கள் சொல்லவேண்டியது தானே. நான் ஐந்தாவது தான் படித்தேன், கண்டக்டர் ஆக தான் வேலை செய்தேன், அதில் என்ன பெருமை. சொல்லிவிட்டுப்போக வேண்டியது தானே" எனக் கூறினார்.
இதையும் படிங்க: திண்டுக்கல் - குமுளி சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு