சென்னை: அதிமுகவின் அதிகாரபூர்வ பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை செயற்குழு கூட்டம் ஒப்புதல் அளித்தது. அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளருக்கான அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டது. மேலும், மூன்றாவது அத்தியாயம் எடப்பாடி பழனிசாமி எனவும் மதுரையில் ஆக.20 ஆம் தேதி மாநாடு உள்ளிட்ட 15 தீர்மானங்கள் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
அதிமுகவின் செயற்குழு கூட்டம் நிறைவடைந்த பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக செயற்குழு அங்கீகரிக்கத்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி கட்சியின் வளர்ச்சிகாக மதுரை மிகப்பெரிய மாநாடு நடத்த தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். கர்நாடகா தேர்தல் குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். செயற்குழுவில் பொதுச்செயலாளருக்கான அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
அண்ணாமலை பற்றி இனிமேல் என்னிடம் கேள்வி கேட்காதீர்கள் என எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு காலை வாரும் கலையை கற்றவர்களுக்கு இந்த புது அரசியல் இலக்கணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை பாவம் என பாஜகவைச் சேர்ந்த அமர்பிரசாத் ரெட்டி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், "அண்ணாமலை ஒரு அரசியல் கத்துக்குட்டி. நாங்கள் அரசியலுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. அண்ணாமலை அரசியலுக்கு வந்து இரண்டு வருடம்தான் ஆகிறது. அதைத்தான் அரசியலில் முதிர்ச்சி இல்லாதவர்களுக்கு பதில் கூற அவசியமில்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். வளர்த்த கிடா மார்பில் பாயக் கூடாது. அது கிடாவாக இருந்தாலும் சரி, ஆடாக இருந்தாலும் சரி" என கூறினார்.
கத்துக்குட்டி என்றும் சொல்லும் அண்ணாமலையுடன் சரிக்கு சமமாக கூட்டணி பேச்சுவார்த்தை பேசியுள்ளீர்கள் என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், "தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கிறது. நீங்கள் பாய வேண்டும் என்றால் திமுக மீதுதான் பாய வேண்டும். அட்டை கடித்து, மாட்டை கடித்து இறுதியாக எங்கள் மீது ஏன் பாய்கிறீர்கள். அதிமுகவினரின் சொத்து பட்டியலையும் வெளியிட்டும். அண்ணாமலை என்ன, பேயா?. அண்ணாமலையை பார்த்து பயம் இல்லை" என கூறினார்.
இன்று ( ஏப்ரல் 16 ) நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் வரும் ஆகஸ்ட் 20 தேதி மதுரையில் மாநாடு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரையில் மாநாடு நடத்துவதற்கு காரணம் என்ன என்பது குறித்து பதிலளித்த ஜெயக்குமார், "தமிழ்நாட்டின் மையப்பகுதியாக மதுரை திகழ்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் மதுரையில் மாநாடு நடத்தினார்கள். மதுரை மய்யப்பகுதி என்பதால் பிற மாவட்டங்களில் இருந்து எளிமையாக வந்துவிடலாம். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் போன்று மாநாட்டின் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழ்நாட்டை மீட்டெடுப்போம். நான்கு ஆண்டிகள் சேர்ந்து மடம் அமைத்தது போல ஓபிஎஸ்ஸின் செயல்பாடுகள் இருக்கிறது" என கூறினார்.
இதையும் படிங்க: சொத்துப்பட்டியல் விவகாரம்: அடுத்த குறி அதிமுக? - அண்ணாமலையின் அரசியல் கணக்கு என்ன?