சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் நீதிமன்றத்தில் தீவிரமடைந்துள்ளன. பொதுக்குழு நடப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் பொதுக்குழுவிற்கு அனுமதி அளிக்கக்கூடாது என வாதாடினார்.
நீதிமன்றத்தில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு காரசார வாதத்தின் சாராம்சங்கள்:
ஓ. பன்னீர் செல்வம் தரப்பு: 'நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. தீர்மானங்களுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளிக்க வேண்டும். நேற்று இறுதி தீர்மானம் கிடைத்தது. 23 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கட்சி விதிகளுக்கு முரணாக செயல்படமாட்டேன் என நீதிமன்றத்தில் என் தரப்பு உத்தரவாதமாகப் பதிவு செய்துகொள்ளலாம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்திற்கு மறுப்புத்தெரிவித்தும், நாளை பொதுக்குழு நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதாடப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தரப்பு: 'பொதுக்குழுவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதற்கான நோட்டீஸ் கடந்த ஜூன் 2இல் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுவிட்டது.
பொதுக்குழு தான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு என்பது கட்சி விதி. ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ அல்ல. பொதுக்குழுவை இருவரும் இணைந்து கூட்ட முடியும். பொதுக்குழு முடிவுகள் கட்சியினரை கட்டுப்படுத்தும்.
கொள்கைகளை உருவாக்கவது உள்ளிட்ட அனைத்திற்கும் பொதுக்குழுவிற்கே அதிகாரம் உள்ளது. எந்த விதியையும் சேர்க்கவோ, நீக்கவோ பொதுக்குழுவால் முடியும். அதற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. நாளை திருத்தம் நடக்காமலும் இருக்கலாம். பொதுக்குழுவில் தான் உறுப்பினர்களின் விருப்பம் அறிவிக்கப்படும்.
பொதுக்குழுவில் பெரும்பான்மையான கருத்துக்கு மதிப்பளிப்பதே ஜனநாயகம் ஆகும். அஜெண்டா இல்லாமல் தான் ஏற்கெனவே பொதுக்குழுக்கள் நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன’.
ஓ பன்னீர் செல்வம் தரப்பு: ’எந்த உறுப்பினரும் பொதுக்குழு கூட்டத்தில் குரல் எழுப்பலாம் என்பதற்கான விதிகளை காட்டுங்கள்’ என ஓ.பன்னீர் செல்வம் தரப்பு, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பு: 'பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கூடாது... மனு விசாரணைக்கு உகந்தது அல்ல’ என எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளது.
'காவல் துறை பாதுகாப்பு வழங்க நேற்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிதிகளுக்கு உட்பட்டுதான் பொதுக்குழு கூட்டப்படுகிறது. ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில், பொதுக்குழுவுக்கு தடைவிதிக்கக் கூடாது’ என எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறியுள்ளது.
ஓ.பன்னீர் செல்வம் தரப்பு: 'நேற்று (ஜூன் 21) அனுப்பிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து அனுப்பிவிட்டேன். வேறு அஜெண்டா ஏதும் இருந்தாலும் இருவரும் சேர்ந்துதான் முடிவெடுக்க வேண்டும்.
கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகத்திற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரே பொறுப்பு. பொதுக்குழுவின் அஜெண்டாவை ( நிகழ்ச்சிநிரலை) இருவரும் தான் முடிவு செய்ய முடியும். உறுப்பினர்கள் யாரும் இதை கேள்வி கேட்க முடியாது'
இவ்வாறு இரு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் பொதுக்குழு வழக்கின் இடைக்கால தீர்ப்பை சற்று நேரத்தில் நீதிபதி வெளியிடவுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு - ஏற்பாடுகள் தீவிரம்