சென்னை: தமிழ்நாடு ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் 1991- 96 ஊழல் மிக மோசமான காலகட்டங்களில் ஒன்றாக இருந்தது என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அண்ணாமலை, "தமிழகத்தில் பல நிர்வாகங்கள் ஊழல் நிறைந்தவை. முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றங்களில் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால் தான் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலமாக மாறியுள்ளது. ஊழலில் முதலிடம் என்று சொல்வேன்" என கூறியிருந்தார்.
அண்ணாமலை பதிலளித்த 1991-96 காலகட்டத்தில் அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தார். மேலும், ஊழல் குற்றச்சாட்டுக்காக ஜெயலலிதா தண்டிக்கப்பட்டுள்ளார் எனவும், அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளதாக அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் விமர்சனம் குறித்து சென்னை பட்டினம்பாக்கத்தில் அதிமுகவின் அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய ஜெயக்குமார், "பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாவடக்கம் இல்லாமல், திமுகவை விமர்சிப்பதற்கு பதில் ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடிப்பது போல பேசி வருகிறார். பாஜக முன்னாள் தலைவர்கள் கூட்டணி தர்மத்தை கடைப்பிடிப்பார்கள். ஆனால் தன்னை முன்னிலை படுத்தி கொள்வதற்காக அண்ணாமலை பல விமர்சனங்களை செய்து வருகிறார். அரசியலுக்கு வந்து மூன்றே ஆண்டுகளான அண்ணாமலை ஜெயலலிதாவை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி.
அண்ணாமலை மீது பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற விமர்சனம் அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறதா என்பதை கேள்விக்குறி ஆக்கிவிடும். பாஜக அதிமுக கூட்டணி தொடரக்கூடாது, பிரதமராக மோடி வரக்கூடாது என்ற நிலைப்பாட்டில் அண்ணாமலை இருக்கிறாரா என்று எண்ணம் தோன்றுகிறது. தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசி வந்தால் கூட்டணி தொடர்வது குறித்து பரிசீலனை செய்யப்படும். அதிமுகவுடன் கூட்டணியில் இருந்ததால் தான் பாஜக சட்டமன்றத்தில் நுழைந்தது.
நாங்கள் தான் அவர்களுக்கு பலம். இதை பாஜக தேசிய தலைவர்கள் உணர்ந்திருக்கின்றனர். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே அண்ணாமலை தனித்துப் போட்டி என்ற நிலைப்பாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தனிக்காட்டு ராஜா போல அண்ணாமலை செயல்படுகிறார். பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்றால் அதிமுகவுக்கு இழப்பு தங்களுக்கு இல்லை. கர்நாடகாவில் தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதால் அந்த தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. ஊழல் பற்றி பேசும் அண்ணாமலை கர்நாடகாவில் ஒப்பந்தங்களுக்கு 40% வாங்கியது தொடர்பாக பேசுவாரா என ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
கூட்டணி தொடர்பாக பாஜகவை பொறுத்தவரை தேசிய தலைமை எடுப்பது இறுதி முடிவாகும் அந்த முடிவு எடுக்கும் உரிமை அண்ணாமலைக்கு கிடையாது. இதே போல் அண்ணாமலை தொடர்ந்து பேசினால் பின் விளைவுகளை சந்திப்பார். அதிமுக ஒரு ஆலமரம், பாஜக ஒரு செடி அதை தெரிந்து கொண்டு அண்ணாமலை செயல்பட வேண்டும். ஜெயலலிதா குறித்து அண்ணாமலையின் விமர்சனத்திற்கு அதிமுக சார்பாக கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறினார்.
இதையும் படிங்க: "மக்களை பற்றி நினைக்காமல் தேர்தலை பற்றி நினைக்கும் திமுக அரசு" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!